Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
வரதட்சணை எனும் வன்கொடுமை!

எழுதியோர் கைகளும் ஓய்ந்துவிட்டன
இந்த வன்செயலை கண்டித்து
பேசியவர்கள் நாவுகளும் வரண்டாகிவிட்டது
பித்தம் தெளிவது எப்போது?

எந்த காலத்திலும் திருந்துவதில்லை
இந்த பொல்லாத ஜென்மங்கள்
பொன் வேண்டுமாம் பொருள் வேண்டுமாம்
பிள்ளையாம் இவனைப் பெற்றதற்காக;

பையனாக இவன் பிறந்ததற்காக!
பண்பில்லாத சிறுமதி யாளர்களே;
அவதாரம் எடுத்தா நீ இங்கு
ஆண் பிள்ளையாக புவி இறங்கினாய்?

பெற்றோர் உனைப் பெறுவதற்காக
பிரத்யேக தவம் ஏதும் செய்தார்களா?
வரம் ஏதும் பெற்று வந்தவனா நீ?
வரதட்சணை ஏன் பெறுகின்றாய்?

என்ன வித்தியாசம் கண்டுவிட்டாய் நீ
எதை இழந்து விட்டாய் நீ ஆனாய் பிறந்து?
பெண்ணை பெற்றவன் தர வேண்டுமாம்
உன்னை பெற்றவர் பெற வேண்டுமாம்

மண்ணில் புதையப் போகும் நாள்
மனிதனே உனக்கு நினைவில்லையா?
ஒப்புக் கொண்டு விடு உன்னை
உழைத்துப் பிழைக்க தகுதியற்றவன் என்று

மனப்பந்தலிலேயே சாசனம் எழுதிவிடு
மண்ணில் வாழும் தகுதியை;
இன்றோடு இழந்து விட்டேன் என்று!
இனி தலைநிமிர்ந்து நடவேன் என்று!!


நற்காரியம் நடைபெறும் போது அபசகுனம் பேசமாட்டீர்
நல்ல காரியம் தடை பட்டு விடுமாம்
மனப் பந்தலே உனது பாவத்தில் அல்லவா
மிகுந்து நிற்கிறது இங்கு

ஏழையாய் பிறந்துவிட்ட பெண்
உன்னை மனம் முடிக்க தகுதியற்றவளா?
எழுபதுக்கு எழுபது என்று
எண்ணித் தர வேண்டுமா உனக்கு?

எவன் கற்றுத் தந்தான் உனக்கு
எப்படி கழுவப் போகின்றாய்
ஏழைக் குமரிகள் சிந்தும்
இரத்தக் கண்ணீர்களின் கறைகளை?

வரதட்சணை ஏற்கும் வாலிபர்களே
வரவில் வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் பாவங்களின் பொதி மூட்டைகளில்
உங்களையும் அறியாது நீங்கள் சேர்ப்பதை

வங்கியில் வைப்பு நிதியாகவும்
வீடு வாசல் நிலமாகவும்
வண்டி வாகனங்களாகவும்
வீட்டு சாதனங்கள் அணிகலன்களாகவும்

தந்தவர்களிடம் பெற்றுக் கொண்டீர்கள்
தர இயலாதவர்களை வாட்டி வதைத்து
தூண்டிய இன்னல்களால்; - அவர்களின்
தற்கொலைகள் எல்லாமே;

நீங்கள் செய்யும் கொலைகள் தாம்
நாட்டில் எங்கே வரதட்சணை கொலை
நடந்தேறினாலும் உனக்கும் அதிலே பங்குண்டு
நடக்கும் தீமைகள் அனைத்திலும் தான்.



வரதட்சணையாக உனக்கு வாரி வாரி
வழங்கிவிட்டு வட்டி கடனாளியாக
வீதிகளில் நிற்கும் மணப்பெண்ணின் தந்தைகள்
வீடுதோறும் இங்கே உண்டு

முப்பதுகளை எட்டியும் மணமுடிக்காது
முதிர் கன்னிகளாய் ஊரெங்கும்
கரை சேராமல் தவித்திருக்கும் அவர்களின்
கண்ணீர்த் துளிகள் ஆழிகளாய் உள்ளனவே

இத்தனை பாவாங்களிலும் வாலிபனே உனக்கு
எள்ளளவும் குறையாது பங்கு உண்டு
எந்த மதத்திலே நீ இருந்தாலும்
எத்தனை சமாதானங்களை நீ கூறினும்

உல் நெஞ்சம் என்ற ஒன்று
உன் வசம் உண்டல்லவா .... அது
கல் நெஞ்சர்களை கூட
கேள்விகளால் துளைக்காமல் ஓய்வதில்லை


மாறாது எதுவுமே இல்லை இங்கு
மாற்றம் என்னும் சொல்லை தவிர
மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள்
மறுமணம் வீசும் பூந்தோட்டங்க ளாகட்டும்

பெற்றதை எயல்லாம் திருப்பி கொடுங்கள்
அடகு வைக்கப்பட்ட மானங்களை
அடமானங்கலாய் திரும்பப் பெறுங்கள்
பெண்களின் பெற்றோர்களிட மிருந்து.