தோல்வியல்ல வேள்வி
இமயம் ஏறும் எண்ணமுடையவனே
இங்கேயே ஏன் நின்றுவிட்டாய்?
மலைப்பாதை களெல்லாம்
மலர்ப்பாதை என்றா நினைத்திட்டாய்?
ஏகிட தூரம் அதிகம் உண்டு
ஏறவே துவங்க வில்லை
இடறி ஏன் நிற்கிறாய்
எல்லாம் சாதிக்கும் இயல்புடையவனே
இளையவனே உந்தன் வரவினை நோக்கி
இமயம் ஏங்கி நிற்குதடா
அது உன் வழித்தடம் நோக்குதடா
இப்பொழுதே விழித் தெழடா
வாழ்வதற்காய் வந்தவன் நீ
வாயிற் கதவில் ஏன் நிற்கிறாய்
வழிதனில் நடந் தேறிடு
வரத்தான் செய்யும் துன்பம்
வரும் துன்பங்களை
வரவிலே வைத்துவிடு
வருமானக் கணக்கிலே அல்ல
உந்தன் அனுபவக் குறிப்பிலே
சராசரியாய் வாழ நீ என்ன
சாமான்ய மானவனா - இல்லை
உலகினை அடைகாக்க பிறந்த
உயிரின் ஒரு கரு நீ
தளிர்த்து செழிக்க விருக்கும்
தருவின் துளி விதை நீ
உலகை வியப்பி லாழ்த்த வந்த உனக்கு
உறக்கம் எதற்கு இமைதான் ஏது
இளையவன் உனக்கு இளைப்பாரல் எதற்கு
உலகை சுமக்க விருக்கும் உனக்கு
இதயப் பைதனில் சோகச் சுமைகளா?
இறக்கி எறிந்துவிடு எரிதழலால் எரித்துவிடு
தோல்வி கண்டாயா துள்ளி எழு
துன்பம் கண்டாயா எள்ளி நகையாடு
எது இல்லை உன்னிடத்து
இல்லை என்னும் சொல் தவிர்த்து
வழி அது வழிதிறக்கிறது
விழி தனை நீ திறக்கையில்
இரு கைகள் இறக்கை யாகின்றன
இதயச் சிறகை நீ விரிக்கையில்
வாழ்வில் தூரமுண்டு வாழ நேரமுண்டு
வழியிலேயே நீ தேம்பி தேங்கிவிடாதே
ஓட்டை யில்லா கதவுகளில்லை
உடைக்க வியலா பூட்டுக்க ளில்லை
மாற்ற முடியா நெஞ்சங்க ளில்லை
மறுபடி விடியா இரவு களில்லை
விரும்புகிறாயா நெருப்பாய் வாழ
விளக்கின் நெருப்பாய் ஒளி கொடு
தங்கப் புதையலை தேடும் நீ
தார்ச்சாலையின் கருங்கற்களை
ஏன் சேகரிக்கிறாய்?
சுமைகளை ஏற்றி மலையேறுவாயா?
புதையலை சேகரிக்கும் பைகளில்
பொல்லாத கவலைகள் தன்னை
ஏன் சுமக்கிறாய்?
காலமென்னும் காட்டாற்றை
ஞாலமுடன் கடந்தேறு
இதயம் தான் உனது ஒரே தோணி
நல்லெண்ணங்கள் ஆங்கே துடுப்பு
இப்பொழுது நீயே குஉறு
உன் இதயப் படகை
கவலைகளால் துளையிடுவாயா
கரைNறும் எண்ணமில்லையா?
காட்டாற்று வெள்ளம் போன்றது வாழ்க்கை
காலம் தாழ்த்திடாதே
ஒதுங்கினால் ஓரமாவாய்
தேங்கினால் சிறு குட்டை
பதுங்கினால் நீயோர் பேடு
அஞ்சாமையை அடைகாத்து
துஞ்சாமல் வழியேறு
உயரப் பறந்தால் தான்
உலகம் உனை அறியும்
உலகையும் நீ அறிவாய்
தோல்வியை இனி மாற்றி
வேள்வி என்றெ ழுதிடு
கவலைகள் உனைக் கண்டு இனிமேல்
கவலை யுறட்டும்
காலக் கடிகாரத்தின்
கனமும் ஓய்வில்லா
நொடி முள்ளாய் சுழன்றிடு
நெடிய உலக வாழ்வெனும்
வரலாற்றில் உன் வாழ்வு
வைர வரிகளால் எழுதப்படட்டும்.
நன்றி : முதுவை சல்மான், ரியாத்