Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த...

ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.

கர்பகாலத்தில் செய்யவேண்டியவைகள் ( தாய் சேய் நலன்

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.


· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.

· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.

· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.

· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.

· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.

· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.

· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.

· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.

· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.
மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.

குழந்தைகள் வளர்ச்சி...

குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது. அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம்.
குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.
***
பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது. குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும்.
பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் நிறையவே உள்ளன. பிறந்த குழந்தையானது, 2 மாதங்களில் சிரிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் கழுத்து தலைசுமக்கும்படி உறுதியாகும். 8 மாதங்களில் குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரும், 12 மாதங்களில் எழுந்து நிற்கும்.
***
குழந்தை பிறந்து முதல் 6 வாரங்கள் வரை தலையை ஒரு புறமாகத் திருப்பியவாறு மல்லாந்து படுத்துக் கொண்டு இருக்கும். திடீரென்று உருவாகும் சத்தம் குழந்தையை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அப்போது குழந்தையின் உடல் `விலுக்'கென்று சிலிர்த்துக் கொள்ளும்.
கைவிரல்களை இறுக்கமாக மூடி வைத்து இருக்கும் குழந்தையின் உள்ளங்கையில் ஒரு பொருளையோ அல்லது விரலையோ வைத்தால் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்ளும். அடுத்த ஒன்றரை மாதத்தில் குழந்தையின் கழுத்து உறுதியாகும். பொருட்களின் மீது கண்களை நிறுத்தி உற்றுபார்க்கும்.
***
மூன்று மாதங்களில் குழந்தைகள் மல்லாந்து படுத்தவாறு தன்னுடைய இரண்டு கைகள் மற்றும் கால்களை சீராக அசைத்து இயக்கும். அழுகைச் சத்தத்துடன் சிணுங்குதல், சந்தோசத்தை வெளிபடுத்தும் வகையில் குரலை உயர்த்துதல் போன்றவற்றை தொடரும்.
இந்த கால கட்டத்தில் குழந்தை தன்னுடைய அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளும். மேலும் அம்மாவின் குரலுக்கு ஏற்ப தனது உணர்வுகளை வெளிபடுத்தும். கைவிரல்களை முன்புபோல் மூடி வைக்காமல் திறந்து வைத்துக் கொள்ளும்.
***
6 மாதங்களில் குழந்தை தன்னுடைய இரண்டு கைகளையும் தட்டியவாறு விளையாட ஆரம்பிக்கும். தன்னைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அருகில் இருந்து ஏதேனும் சத்தம் கேட்டால் அந்த பக்கமாக குழந்தை தனது தலையைத் திருப்பும்.
படுத்த வாக்கிலேயே உருண்டு கொண்டு செல்லும். எவ்வித பிடிப்போ உதவியோ இல்லாமல் உட்கார ஆரம்பிக்கும். குழந்தை நிற்கும்பொழுது தன்னுடைய உடல் எடையைத் தாங்கும் சக்தியை தனது கால்களில் பெறும்.
***
குழந்தைகள் 9 மாதங்களில் கைகளை ஊன்றியோ, எவ்வித பிடிப்போ, உதவியோ இல்லாமல் உட்காரும். அப்புறமாய் குழந்தை தவழ்ந்து செல்ல ஆரம்பிக்கும். 12 மாதங்களில் குழந்தை எழுந்து நிற்கத் தொடங்கும். நடக்க பழகும். அத்தை, மாமா போன்ற வார்த்தைகளை கொஞ்சும் மொழியில் சொல்ல ஆரம்பிக்கும்.
2 வருடங்களில் கால் சட்டை போன்ற உடைகளை உடுத்திக் கொள்ளும். கீழே விழாமல் ஓடிச்செல்லும். புத்தகத்தில் உள்ள படங்களை பார்க்க ஆர்வபடும். தனக்கு என்ன வேண்டும் என்பதை வாய் திறந்து கேட்கும். பிறர் சொல்லுவதை திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும்.
***
குழந்தைகள் 3 வயதை அடைந்தால் தலைக்குமேல் கையைக் கொண்டு சென்று பந்தை வீசி எறியும்.
` பையனா, பெண் பிள்ளையா' போன்ற எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லும். உடல் பாகங்களின் பெயரைக் கேட்டால் சொல்லி விடும்.பொருட்களை இங்கேயும், அங்கேயும் வைப்பது போன்ற சின்னச்சின்ன வேலைகளில் உதவி செய்யும். மூன்று சக்கர சைக்கிளை மிதித்து ஓட்ட ஆரம்பிக்கும். புத்தகங்கள் அல்லது பத்திரிகைகளில் உள்ள படங்களின் பெயரைச் சொல்லும்.
***
குழந்தைகள் 5 வயதில் துணிகளை உடுத்திக் கொள்ளும்போது ஒரு சில பட்டன்களையாவது போட்டுக் கொள்ளும். குறைந்தபட்சம் மூன்று நிறங்களின் பெயரையாவது சொல்லும். படிக்கட்டுகளில் பெரியவர்களை போலவே கால்களை மாற்றி வைத்து ஏறிச்செல்லும். குதித்தும், தாண்டியும் செல்லத் தொடங்கும்.
அந்தந்த காலகட்டத்திற்கும் செய்ய வேண்டிய செயல்களை குழந்தையால் செய்ய முடியவில்லை என்றால் உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்று குழந்தையைக் காட்டி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
***
குழந்தை நடப்பதற்கு தயாராக இல்லாத நேரத்தில் நடக்க வைத்து வலுக்கட்டாயமாக பயிற்சி கொடுப்பது எந்தவித பலனையும் தராது. குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது அதிர்ச்சி, பயம் போன்றவற்றுக்கு உள்ளாகி இருந்தாலோ குழந்தைகளின் செயல்பாட்டிலும், பழக்க வழக்கத்திலும் மாறுபாடுகள் ஏற்படும். சில சமயங்களில் ஒரு குழந்தை சம வயது கொண்ட மற்றொரு குழந்தையைவிட சில செயல்பாடுகளில் குறைவான வளர்ச்சியோ அல்லது அதீத வளர்ச்சியோ பெற்று இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்துகொள்வது நலம்.

வேர்ட் டேபிள் : செல் உயரம் மாற்ற...

வேர்ட் தொகுப்பில் டேபிள்களை அமைக்கையில், சிலவற்றை அதிக இடத்துடன் அமைப்போம். சிலவற்றைச் சுருக்கி சிறியதாக அமைத்திட ஆசைப்படுவோம். வேர்ட் மாறா நிலையில் தந்துள்ள, டேபிள் செல்களின் உயரத்தை எப்படி மாற்றுவது என இங்கு காணலாம். இந்த செட்டிங்ஸ் அமைப்பு, வேர்ட் தொகுப்பிற்கேற்றபடி மாறுபடும். நீங்கள் வேர்ட் 97 அல்லது வேர்ட் 2000 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. டேபிளின் எந்த படுக்கை வரிசையின் உயரத்தை மாற்ற வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2.டேபிள் மெனுவிலிருந்து Cell Height and Width என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Cell Height and Width என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Row என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இந்த பாக்ஸில் உங்கள் டேபிளின் படுக்கை வரிசை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை அமைக்கலாம். இதில் Auto row height, At Least row height, Exactly row height என மூன்று பிரிவுகள் இருக்கும். இதனைப் பயன்படுத்தினால் தானாக, அல்லது குறைந்த பட்சம் அல்லது சரியான ஒரு அளவில் என செல்லின் உயரத்தை அமைக்கலாம்.
4. இவற்றில் At Least row height அல்லது Exactly row height என்பதைத் தேர்ந்தெடுத்தால், அதில் கட்டாயம் ஓர் அளவினை அமைக்க வேண்டும்.
5.ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் வேர்ட் 2002 அல்லது வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், இந்த செட்டிங்ஸை சற்று வேறு வகையில் அமைக்க வேண்டும்.
1. டேபிளின் எந்த படுக்கை வரிசையின் உயரத்தை மாற்ற வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. டேபிள் மெனுவில் Table Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், வேர்ட், உங்களுக்கு Table Properties என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் Row என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர் Specify Height ஐத் தேர்ந்தெடுக்கவும்.
5. நீங்கள் விரும்பியபடி செல்லிற்கான உயரத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இந்த உயரத்திற்கு குறைந்த பட்சம் அல்லது சரியாக (At Least or Exactly) என்ற வரையறையை அமைக்கலாம்.
5. ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பினைப் பயன்படுத்துபவராக இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ளபடி அமைப்பை மேற்கொள்ளவும்.
1. டேபிளின் எந்த படுக்கை வரிசையின் உயரத்தை மாற்ற வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2.அடுத்து ரிப்பனில் Layout டேப்பினைக் காட்டவும்.
3. பின்னர் Cell Size குரூப்பில், உயரத்திற்கான செட்டிங்ஸை நீங்கள் விரும்பிய படி அமைக்கவும். இப்போது வேர்ட் Table Properties என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. உயரம் அமைக்க அதிகமான ஆப்ஷன்ஸ் தேவை என்றால், Table Properties என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இது செல் சைஸ் குரூப்பில், கீழாக வலது பக்கம் இருக்கும்.
5.இதில் Row என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் விரும்பும் உயரத்தினை அமைக்கலாம்.
6. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கடல், உயிரினங்களின் தாய் மடி. விசித்திரங்களின் உறைவிடம்

கடல், உயிரினங்களின் தாய் மடி. விசித்திரங்களின் உறைவிடம். வினோத உயிரினங்களின் புகலிடம். உலகையே தழுவி இருக்கிறது கடல். கரையில் கால் பதித்தவர்க்கெல்லாம் தென்றலால் தாலாட்டி சுகம் தருகிறது. கவிஞர்களுக்கு கற்பனை தருகிறது. வலைவிரிப்பவர்க்கும் வாழ்க்கை தருகிறது. வானுக்கு மேகத்தை பரிசளித்து, வான்மழையாகி நமக்கு வாழ்வளிக்கிறது. வணிகத்திற்கு வழிவிடுகிறது. கோபம் கொண்டால் கொந்தளிக்கிறது. சூறாவளியாய், சுனாமியாய் சுழன்றடித்து சூறையாடி விடுகிறது.

அட்லாண்டிக், ஆர்க்டிக், பசிபிக் பெருங்கடல்கள் உலகை சூழ்ந்துள்ளன. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகியவை இந்தியாவை சூழ்ந்துள்ளன. இதுதவிர குறுகிய பகுதியில் நிலம் சூழ் கடல்கள் அமைந்துள்ளன. காஸ்பியன் கடல், செத்த கடல் (டெட் சீ) போன்றவை நிலம் சூழ் கடல்களாகும்.

கடல் மேற்பரபில் வீசும் வளிமண்டல மாற்றம், புவியீர்ப்பு மற்றும் காந்தசக்தி போன்றவற்றின் காரணமாக கடலில் அலைகள் தோன்றுகின்றன. அலையால் கடல் எப்போதும் சலனபட்டுக் கொண்டே இருக்கிறது.


பசிபிக் பெருங்கடல் உலகின் மிகபெரிய கடலாகும். 18 கோடி ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. உலக பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இது பூமியின் அனைத்து கண்டங்களின் கூட்டு நிலபரப்பை விட மிகபெரியதாகும்.

பசிபிக் கடலில் 2,500 தீவுகள் இருக்கின்றன. இக்கடலில் உலகின் மிக ஆழமான பகுதியான மரியானாட்ரெஞ்ச் இருக்கிறது. இது 10,911 மீட்டர் ஆழமுடையது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும். பசிபிக் கடல்நீரின் வெப்பநிலை துருவபகுதிகளில் 0 டிகிரிக்கும் குறைவு. நில நடுக்கோடு பகுதிகளில் 29 டிகிரி செல்ஷியஸ்.

இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் 3,890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7,450 மீட்டர். இந்தக் கடலில் ஏற்படும் தட்ப வெப்பநிலையால் இந்தியா இருமுறை மழை பெறுகிறது.

அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு பருவ காற்றும், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவக் காற்றும் நல்ல மழையைத் தருகின்றன. அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக்காற்றும் மழை தருகிறது.

வாணிபம் செய்வதற்கு கடல் வசதியாக இருக்கிறது. அதனால் பொருளாதாரத்திலும் கடலின் பங்கு முக்கியமாகிறது. இந்திய பெருங்கடலானது மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்பாதையை கொண்டிருக்கிறது. இது பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய பெருங்கடலை ஒட்டிய கரைபகுதிகளில் இருந்தே அதிகமான பெட்ரோலியம் எடுக்கபடுகிறது. இது உலக பெட்ரோலிய எரிபொருளில் 40 சதவீதமாகும்.

கடலானது பெட்ரோல் மட்டுமல்லாது மனிதனுக்கு தேவையான பல்வேறு வளங்களைக் கொடிருக்கிறது. உணவுத் தேவையின் பெரும்பகுதியை ஈடு கட்டுவது கடல்தான். மீன்கள், நண்டுகள், கடற்பாசி என பல உணவு பொருட்கள் கிடைக்கின்றன.

மேலும் கடற்கரை மணல்கள் பல்வேறு தாதுவளம் மிக்கவையாக இருக்கிறது. முத்துக்கள், பவளம் போன்ற ஆபரணங்களும் கடலில் இருந்து கிடைக்கின்றன. சங்கு குளிப்பதும் உண்டு. அலையில் இருந்து மின்சாரம் பெறபடுகிறது. நிலத்தில் கிடைக்காத பல்வேறு தாதுக்கள் கடலில் இருந்து எடுக்கபடுகின்றன.

உலகில் கடல்பகுதி 70 சதவீதம். 85 சதவீத உயிரினங்கள் கடலுக்குள்தான் வசிக்கின்றன. அவற்றில் பல விசித்திரமானவை. நீலத்திமிங்கலம் உலகில் மிகபெரிய உயிரினமாகும். நீளமான கடல்மீன் ஓர்பிஷ்(6மீ), உயரமான மீன் சன்பிஷ் (4மீ) ஆகும்.

கடல்சுறா மிகவும் விஷமும், வேட்டை குணமும் கொண்டது. தரையில் நடக்கும் மீன் இனமும் இருக்கிறது. அதன் பெயர் மட்டி ஸ்கிபர். பிளாங்டான் என்னும் மெல்லுடலி கண்ணாடிபோன்ற உடல் கொண்டது. மிகக்கொடிய விஷஜந்துக்கள் கடலில் அதிகம். கடற்பாம்புகள் அதிக விஷமுள்ளவை.

தட்பவெட்ப மாற்றத்தால் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஏற்படுகின்றன. அவை புயலாக, சூறாவளியாக மாறி நிலபகுதியை தாக்கி சேதபடுத்துகின்றன. ஆண்டுதோறும் புயல்களால் லட்சக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள். பேரலைகளான சுனாமியாலும் நிலம் பேரழிவைச் சந்திக்கிறது. கடந்த 2004-ல் ஏற்பட்ட ஆழிபேரலை 2 1/4 லட்சம் பேரை பலி வாங்கியது.

மனிதனின் தாறுமாறான புழக்கத்தால் கடல் மாசடைந்து வருகிறது. பிளாஸ்டிக் கடலில் கலப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் கடல்பறவைகள், ஒரு லட்சம் பாலூட்டிகள், கணக்கற்ற மீன்கள் சாகின்றன. கடற்பயணத்தில் சிந்தும் எரிபொருள், கடலில் கலக்கும் கழிவுகளாலும் கடல் மாசுபடுகிறது. இவற்றாலும் உயிரினங்களுக்கு ஆபத்துதான்...!

சிக்க வைக்கும் தூண்டில்கள்-இணையதள பயன்பாடு...

மிக மோசமான ஏமாற்றும் தூண்டில்கள் குறித்து இங்கே தருகிறோம்.

1. பிளாஷ் பயன்படுத்தும் இணைய தளங்கள்: அண்மைக் காலங்களில், அடோப் நிறுவனத்தின் கிராபிக்ஸ் சாப்ட்வேர் தொகுப்பான பிளாஷ் பயன்படுத்தும் இணைய தளங்கள், பெரிய அளவில், எளிதாக கெடுதல் புரோகிராம்களுக்கு வழி விடும் தளங்களாக மாறி வருகின்றன. இதில் தற்போது பிளாஷ் குக்கீஸ் எனப்படும் சிறிய புரோகிராம்களும் சேர்ந்துள்ளன. வழக்கமாக, இணைய தளங்கள் நம் கம்ப்யூட்டரில் பதிக்கும் குக்கீஸ் போல, இவையும் இறங்கிவிடுகின்றன. இவை நாம் செல்லும் தளங்கள் குறித்த தகவல்களை, இதனை அனுப்பியவருக்குப் பட்டியலிட்டு அனுப்புகின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால், மற்ற குக்கிகளை அழிக்கும் போது, இவை நீக்கப்படாமல் தங்கிவிடுகின்றன.
இத்தகைய சிக்கலிலிருந்து தப்பிக்க, நம்முடைய பிளாஷ் புரோகிராம்களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். அப்டேட் செய்வதும், நாமாக அடோப் தளம் சென்று மேற்கொள்வதாக இருக்க வேண்டும்.
2. சுருக்கப்பட்ட தொடர்புகள் (Shortened Links): : ஸ்கேம் மெயில் அனுப்புபவர்கள், ட்விட்டர் சமுதாய தளத்தினை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனென்றால், ட்விட்டர் தளம் சுருக்கப்பட்ட தளப் பெயர்களை அதிகம் பயன்படுத்துகிறது. இந்த சுருக்கப்பட்ட தளப் பெயர்களில், மால்வேர் புரோகிராம்கள் மற்றும் ஸ்கேம் பைல்களை மறைத்து வைப்பது எளிதாகிறது. எனவே லிங்க் மீது கிளிக் செய்து தளம் செல்வதைத் தவிர்க்கவும். இதற்குப் பதிலாக ட்விட்டர் கிளையண்ட் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தவும். இதற்கு ட்வீட் டெக் (TweetDeck) ) அதிகம் பயன்படும்.
3. மின்னஞ்சல் ஸ்கேம் அல்லது இணைப்பு கோப்புகள்: இணைக்கப்பட்ட கோப்புகள் என்ற பெயரில் நம் கம்ப்யூட்டரைக் கெடுக்கும் வைரஸ்கள் மற்றும் பிஷ்ஷிங் மெயில்கள் இன்று அன்றாட வழக்கமாகி விட்டாலும், இவற்றை உண்மையான மெயில் களிடமிருந்து பிரித்துப் பார்ப்பது கடினமானகும். இதிலிருந்து தப்பிக்க, மெயில் இணைப்பு கொண்டிருந்தால், அதனைச் சந்தேகிக்கவும். அது ஒரு இணைய தளக் கோப்பாக இருப்பின், அந்த தளம் சென்று பார்க்கவும். அல்லது இணையத்திலேயே இந்த இணைப்பு கோப்புகளைச் சோதனை செய்து, அதில் வைரஸ் உள்ளதா என்று தெரிவிக்கும் இணையதள சேவைகளைப் பயன்படுத்தவும்.
4. வீடியோ, மியூசிக் பைல்கள்: திருடப்பட்ட மியூசிக்,வீடியோ மற்றும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் பைல்களைத் தரும் தளங்கள் (Torrent sites ) மிக அதிகமான எண்ணிக்கையில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைக் கொண்டிருப்பதாக ஹார்ட்வேர் பல்கலையில் மேற்கொள்ளப் பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த தளம் செல்பவர்கள், பெரும்பாலும் கட்டணம் செலுத்தாமல், இதில் கிடைக்கும் கோப்புகளைப் பெறுவதால், இந்த தளங்கள் வாடிக்கையாளர்களின் நலனைக் காப்பதே இல்லை. எனவே இந்த தளங்களில் இருந்து கோப்புகளை இறக்குவதற்கு முன் நன்கு சிந்திப்பது நல்லது. கட்டாயம் அவை தேவை எனில், உபரியாக, முக்கிய கோப்புகள் இல்லாமல், நிதி சார்ந்த பணி மேற்கொள்ளாத கம்ப்யூட்டர்களில் இந்த தளங்களுக்குச் செல்வது நல்லது.
5. பாலியல் தளங்கள்: வாடிக்கையாளர் களைப் பிடித்து அவர்களுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்காக, பாலியல் படங்கள் மற்றும் வீடியோக்களை சில தளங்கள் இயக்குகின்றன. ஆனால் இவற்றைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள், என்றாவது ஒரு நாளில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டது போல, இதற்கும் உபரியாக உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்தவும்.
6.வீடியோ சப்போர்ட் பைல்கள்: சில வீடியோ வகைகளை தரவிறக்கம் செய்கையில், அவற்றை இயக்க, சில குறிப்பிட்ட கோடக் பைலினை, இறக்கிப் பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம். இந்த வகையிலும், நம் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்கள் இறங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதுகாப்பு குறித்த பணிகளை மேற்கொள்ளும் ட்ரென்ட் (Trend Micro) நிறுவனத்தளத்தில் இது குறித்த பயனுள்ள தகவல்கள் உள்ளன.
7. போன்களுக்கான சாப்ட்வேர் தொகுப்புகள்: மொபைல்போன்களுக் கான, குறிப்பாக ஸ்மார்ட் போன்களுக் கான, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இப்போது மொபைல் போன் நிறுவனத் தளங்களிலும், பிற தளங்களிலும் கிடைக்கின்றன. இந்த போர்வையில் கெடுதல் புரோகிராம்களும் நுழைகின்றன. அண்மையில் பிரபலமாகி வரும் ஆண்ட்ராய்ட் சார்ந்த புரோகிராம்கள் பல இவ்வாறு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இவற்றிலிருந்து தப்பிக்க தளங்களின் தன்மையை தெரிந்து செல்வது நல்லது.
8.தேடல் சாதனம் வழியே: குறிப்பிட்ட தகவல் சார்ந்த தளங்களைத் தேடுகையில், முதன்மைத் தளமாகப் பட்டியலிடப்படும் தளங்களில் பல, கெடுதல் தரும் புரோகிராம்கள் இருக்கும் தளங்களாக உள்ளன. வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் மெக் அபி நிறுவனம், இந்த வகையில் 19% தேடல் முடிவுகள் இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே தேடல் சாதனங்கள் தரும் முடிவின் அடிப்படையில், தளங்களுக்குச் செல்வதாக இருந்தால், அனைத்து தளங்களையும் ஆய்வு செய்து, கெடுதலாக இருக்காது என்று உறுதி செய்த பின்னரே செல்லவும்.
9.பி.டி.எப். முகமூடியுடன் வைரஸ்: கடந்த சில ஆண்டுகளாகவே, மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் இயக்கத்திற்கான பாதுகாப்பு பைல்களை, மிக சிரத்தையுடன் வழங்கி வருகிறது. இதனால், வைரஸ்களைப் பரப்புபவர்கள், புதிய வழிகளைக் கையாள்கின்றனர். அடோப் ரீடர் போன்ற சாப்ட்வேர் தொகுப்புகளில் உள்ள பாதுகாப்பற்ற வழிகளைக் கண்டறிந்து, தங்கள் நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதனால், பி.டி.எப். பைல்களின் போர்வையில், மோசமான வைரஸ்கள் பரப்பிவிடப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டில் பரவிய இத்தகைய பைல்களில், 49% பைல்கள் பி.டி.எப். போர்வையில் வந்தன. இதிலிருந்து தப்பிக்க அடோப் ரீடர் தொகுப்பின் அப்டேட்டட் பதிப்பைப் பயன்படுத்தவும். அல்லது பி.டி.எப். பைல்களைப் படிக்கும் வேறு சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தவும்.
10. வீடியோ பிளேயர் வழியாக: குயிக் டைம் போன்ற, பிழைகள் கொண்ட வீடியோ பிளேயர் தொகுப்புகள் வழியாக, மால்வேர் புரோகிராம்கள் பரவுவது இப்போது பரவிவருகிறது. வீடியோ இயக்கப்படுகையில் இந்த மால்வேர் புரோகிராம்கள், கம்ப்யூட்டரை அடைந்து, பின் அதிலிருந்து மற்றவற்றிற்குப் பரவுகின்றன. அந்த கம்ப்யூட்டரையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றன. இதிலிருந்து தப்பிக்க, வீடியோ பிளேயர் புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.
11. தானாக பதியப்படும் சாப்ட்வேர்கள்: பொதுவாக, நமக்கு வேண்டிய புரோகிராம்களை, டவுண்லோட் செய்து, பின் நாம் விரும்பும் நேரத்தில் அவற்றை இன்ஸ்டால் செய்திடுவோம். ஆனால் சில இணைய தளங்களில், நம்மைக் கவரும் வகையில் சில புரோகிராம்கள் குறித்து தகவல் தரப்படும். அதன்பால் ஈர்க்கப்பட்டு, நாம் கிளிக் செய்தால், அவை தானாகவே நம் கம்ப்யூட்டரில் நேரடியாக இன்ஸ்டால் செய்யப்படும். இவற்றை driveby download புரோகிராம் கள் என அழைக்கின்றனர். இத்தகைய புரோகிராம்கள் பெரும்பாலும் மால்வேர் புரோகிராம் களாகவே இருக்கின்றன. இதிலிருந்து தப்பிக்க, நம் பாதுகாப்பு புரோகிராம்களை எப்போதும் அப்டேட் டட் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.
12. போலியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள்: சில ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், நமக்கு சில இலவச சேவைகள் செய்வதாகக் கூறி, பின் பயமுறுத்தி, நம்மிடமிருந்து பணத்தைப் பெறும் வழிகளில் இறங்கும். நம் வங்கி கணக்கினை எல்லாம் கேட்கும். இத்தகைய புரோகிராம்கள் extortionware என அழைக்கப்படுகின்றன. குழந்தை களை கடத்திச் சென்று பணம் பறிப்பது போலத்தான் இதுவும். இதிலிருந்து தப்பிக்க, உங்களைப் பயமுறுத்தி வரும் செய்திகளை, அலட்சியப்படுத்தி விடுங்கள்.
13.நிறுவனங்கள் பெயரில் விளம்பரங்கள்: பெரிய நிறுவனங்களுக்கு உங்களை இட்டுச் செல்வதற்கான லிங்க்குகளைக் காட்டி, அதில் கிளிக் செய்திட உங்களுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் காட்டப்பட்டால், அதன் வழியே செல்ல வேண்டாம். இவை எப்போதும் தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும். மேலே குறிப்பிட்ட வழிகள் தவிர, இன்னும் நிறைய வழிகளில் நம்மைச் சிக்கவைத்திடும் இடங்கள் இணையத்தில் இருக்கின்றன. நம் பணிகளை மட்டுமே கவனித்து, இயங்கினால் நமக்கு வரும் இடையூறுகளில் பலவற்றைத் தவிர்க்கலாம்.

தூக்கம் ஒரு மாமருந்து...

நித்திய நியமங்களில் நித்திரைக்கு நிரந்தர இடம் உண்டு. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரமும் 6 வயது வரை 15 மணி நேரமும் சிறுவர்கள் 12 மணி நேரமும் பெரியவர்கள் 8 மணி நேரமும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 மணி நேரமும் உறங்கினால் நமது உயிர் பேட்டரி சார்ஜ் ஆகி ஆரோக்கியம் அழிவு படாமல் உயர்த்திடப்படும்.

மன சஞ்சலம் தீர்க்கும் மருந்து உறக்கம்,கவலைகளைக் கரைக்கும் மருந்து உறக்கம்,உடல் பிணிகளைப் போக்கும் மருந்து உறக்கம்,தினம் புத்துணர்ச்சியைத் தரும் மருந்து உறக்கம்,ஆழ்மனதை சுத்தரிக்கும் மருந்து உறக்கம்,உறக்கம் இல்லையேல் நரம்பு தளர்வு ஏற்படும்

இன் சோம்னியா நோய் ஏற்படும்.அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படாது.கழிவு மண்டல நச்சுக்கள் உடலில் தேங்கும்.மனம் தறி கெட்டு பாயும்.

சுவாசக் காற்று, நீர், வெப்பத் தேவை போல் உறக்கம் அத்தியாவசியக் கலை. அதை அருமையாக அனுபவிப்பவர்கள் மிகக் குறைவு.பகலில் தூங்கியே இரவுத் தூக்கத்தைத் தொலைத்து தொல்லைகளுக்கு ஆளாகுபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். தூக்க மாத்திரையின் துணையுடன் ஒப்புக்குத் தூங்குபவர் நம்மில் பலர் உள்ளனர்.பகல் தூக்கம் பட்டுத் தூக்கம்
இரவு தூக்கம் இன்பத் தூக்கம்.நாம் படுக்கைக்கு சென்றவுடன் தூங்கும் தன்மையைப் பெற்றால் அதுவே வாழ்வின் மிகப் பெரிய அரிய பொக்கிஷமாகும். அதுவே மன நிம்மதிக்கு அத்தாட்சி, சான்றாகும்.

இரவுத் தூக்கத்தில் ஜீரண மண்டலம் தவிர மற்ற தசைநார்கள் இயக்கங்கள் முழு ஓய்வு எடுத்து அழிந்த திசுக்கள் புத்துப்பித்தல் பராமரித்தல் நடைபெறுகிறது. உடலில் தேங்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக நரம்பு சோர்வு நரம்பு தளர்ச்சி சரி செய்யப்படுகிறது.
'நினைந்து நினைந்து உணர்ந்த உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்த அன்பே&
தவம் புரியேன் தவம் புரிந்தார் தமைப் போல நடித்தேன்
தருக்குகின்றே னுணர்ச்சியிலாச் சடம் போல விருந்தேன்.

சுகமன நித்திரை கிடைக்க சில,
1. இரவல் தூக்கமாத்திரை, போதை வஸ்துகள் சாப்பிடக்கூடாது
2. இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்கு முடித்தல்.
3. கனி உணவாக சாப்பிடுதல் நல்லது.
4. உணவு முடித்து ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்லுதல். (அரை மணி நேரம் குறுநடை செல்லலாம்.)
5. சளி, இருமல், சுவாசப்பிணிகள் இருப்பவர்கள் பால், தயிர் முட்டை உணவை இரவில் நிறுத்த வேண்டும். தூங்கும் குழந்தைகளை எழுப்பி பால் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
6. இரவில் படுக்கும் முன் சூடான காபி, டீ, பிற இதர குளிர்பானங்கள் தவிர்க்கப்படவேண்டும்-.
7. படுக்கும் முன் தியானம் செய்யலாம்.
8. அலுவலக வேலை, தீர்வு கிட்டாத வேலைகளை இரவில் செய்யக்கூடாது.
9. படுக்கும் முன் அரை டம்ளர் அளவு நீர் பருகலாம்.
10. கடவுள் சிந்தனை, மந்திரம் உச்சரிக்கலாம்.
11. மனதுக்கு பிடித்த இசை நல்லது.
12. பல நேரம் தேவையற்ற இரைச்சல், ஓசை, எரிச்சல் தரும் சினிமாப் பாடல்கள் நல்ல தூக்கத்தில் முதல் தர எரிரியாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
13. தினசரிக் கவலைகளை இரவு 8 மணிக்குள் வெளியேற்றிவிட வேண்டும். கரைத்து விட வேண்டும். தொலைத்து விட வேண்டும். வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை படுக்கைக்கு அழைத்துச் செல்லக்கூடாது.

வளவளா' பேச்சைக் குறையுங்களேன்!

நம் சம்பளத்தை வைத்து, மாதம் முழுக்க உள்ள செலவுகளைச் சந்திக்க வேண்டும் என்பது, கடினமே. அதே போல் தான், நேரமும். நமக்கிருக்கும் நேரத்தில், வீட்டுக்கு அடிக்கடி வரும் விருந்தினர்களை வர வேண்டாம் என்று சொல்வதும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இதற்குச் சிறந்த வழி, அடிக்கடி, "போன்' பேசுவதைத் தவிர்ப்பதே.
யோசித்துப் பாருங்கள்! நீங்கள் பேசும் 90 சதவீத, "போன்'கள், வெறும் உபசரிப்பு வார்த்தைகளாகவே இருக்கும். "என்னடி பண்றே... இன்னிக்கு என்ன,
"டிரெஸ்' போட்டிருக்கே... என்ன சமையல்? டிபனுக்கு? உங்கம்மாவோட பேசினியா? சாரு வரேன்னு சொன்னாளே... வந்தாளா? எப்படி இருக்காளாம்? அவ குழந்தை சவுக்கியமா...' இப்படி தான் தினமும் பேச்சு போகிறது.
உங்கள் நண்பிகளுடன், அரட்டை அடிக்க வேண்டியது தான்; நாள் முழுதும் பரபரவென வேலை செய்யும்போது, கொஞ்சம், "ரிலாக்ஸ்' செய்து கொள்ள, இந்த, "போன்கால்'கள் உதவும். ஆனால், அதுவே உங்கள் நேரத்தை விழுங்கும் அளவு சென்று விடுவதை நீங்கள் கவனித்திருக்கவே மாட்டீர்கள்? "என்ன விஷயம்? டாக்டரிடம் போனியா? மருந்து சாப்பிட்டீயா? ஓகே... நாளைக்கு பேசலாம்' - இது போதும் ஒருவரை விசாரிக்க! முயன்று பாருங்களேன்!
கரும்புள்ளிகள், மச்சங்கள், கரும்படலங்கள் - வித்தியாசம் தெரியுமா?
பெரும்பாலான, "பியூட்டி பார்லர்'களுக்குச் சென்றால், "உங்கள் முகத்தில், "பிளாக் ஹெட்' அதிகமாக உள்ளது. நீக்கித் தரட்டுமா? "பேஷியல்' செய்து கொள்ளுங்களேன்...' என, தொல்லை செய்வர்.உங்கள் முகத்தில் இருப்பது, நிஜமாகவே கரும்புள்ளி தானா என்பது தெரியுமா உங்களுக்கு? மச்சத்தைக் கரும்புள்ளி என்று கூறி விட முடியுமா?
கரும்புள்ளி என்றால், முகத்தின் மேல் தோலில், நிறத்தைக் கொடுக்கும் நிறமி செல்கள் ஒரு இடத்தில் குவிந்து காணப்படும். வெயிலின் தாக்கத்தை தோல் தாங்கிக் கொள்ளும் வகையில், இந்த செல்கள் சில இடங்களில் குவிந்து விடும். வெயிலில் அதிகம் சுற்றும்போது, இது போன்று கரும்புள்ளிகள் ஏற்படும்.
ஆனால், மச்சங்கள் அப்படி அல்ல. உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், மச்சங்கள் தோன்றலாம். இதற்கு வெயிலைக் காரணம் கூற முடியாது. சில நிறமி செல்கள் ஒரே இடத்தில் தானாகவே குவிவதால், இது போன்று மச்சங்கள் ஏற்படுகின்றன. மச்சத்தில் பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் கருமை நிறத்தில் மச்சங்கள் தோன்றும். சிலருக்கு அடர் பிரவுன் நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் மச்சங்கள் தோன்றலாம். கரும்படலங்கள் அல்லது பிரவுன் நிற புள்ளிகள், வெயிலால் மட்டுமே ஏற்படுபவை. பரம்பரை காரணமும் இதற்கு உண்டு. முகத்திலும், கைகளிலும் இது தோன்றும். வெளிர் நிறத் தோலுடையவர்களிடம் இது அதிகம் காணப்படும். எனவே, "பார்லரில்' உங்களிடம், அது, இது எனக் கூறி ஏமாற்றினால், ஏமாந்து விடாதீர்கள். உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை நீங்களே ஆராய்ந்து, சந்தேகம் இருந்தால், தோல் நோய் நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து, அவர் ஆலோசனை பேரிலேயே, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

டெக்ஸ்டர் - கூடுதல் வசதிகளுடன் ஒரு வேர்ட்பேட்

விண்டோஸ் தொகுப்புடன் வரும் நோட்பேட் டெக்ஸ்ட் எடிட்டருக்குப் பதிலாக ஒரு தொகுப்பைத் தேடினால், இணையத்தில் நிறைய தொகுப்புகளைப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, நோட்பேட் ++ மற்றும் நோட்பேட் 2 ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் வேர்ட்பேட் தொகுப்பிற்குப் பதிலாகப் பயன்படுத்த இன்னொரு தொகுப்பினை யாரும் தேடுவதில்லை. ஏனென்றால், அவர்கள் ஆபீஸ் தொகுப்பு தரும் வேர்ட் ப்ராசசரை எடுத்துப் பயன்படுத்து கின்றனர். வேர்ட் பேட், நோட்பேட் தொகுப்பினைப் போலவே, வேகமாக டெக்ஸ்ட் அமைக்க உதவுகிறது. டெக்ஸ்ட் எடிட் செய்வதிலும் நல்ல சப்போர்ட் தருகிறது. நோட்பேட் தராத பல எடிட்டிங் வசதிகளை வேர்ட்பேட் தருகிறது. இந்த வகையில் பார்க்கையில், வேர்ட்பேட் தொகுப்பிற்கு இணையாக டெக்ஸ்ட்டர் என்ற தொகுப்பு கிடைக்கிறது. நோட்பேடில் உருவாக்கும் தனி டெக்ஸ்ட்டாக இருந்தாலும், பல பார்மட்டிங் கொண்ட டெக்ஸ்ட்டாக இருந்தாலும், டெக்ஸ்ட்டர் அதற்கான வழிகளையும் வசதிகளையும் தருகிறது. வேர்ட்பேட் போலவே இதுவும் வடிவமைப்பும் கட்டமைப்பும் கொண்டுள்ளது. இதில் ரிப்பன் இன்டர்பேஸ் இல்லை என்பதால், மெனு இயங்க அதிக இடம் கிடைக்கிறது. இதனை இயக்க டாட் நெட் பிரேம் ஒர்க் 4.0 தேவைப்படுகிறது. மற்றபடி எந்த முன்னேற்பாடும் தேவையில்லை. வேர்ட்பேட் இயங்க 40 எம்பி இடம் எடுத்துக் கொள்கிறது. டெக்ஸ்ட்டர் இயங்க 7 எம்பி இடம் போதும். இதில் கேரக்டர் மற்றும் வரிகள் எண்ணப்படக் கூடிய வசதி கிடைக்கிறது. திரை முழுவதும் டெக்ஸ்ட்டுக்காக மாற்றி படித்து எடிட் செய்திடலாம். ஆர்.டி.எப். சுருக்க முறை வழியினை மேற்கொள்ளலாம். இதன் மூலம் டாகுமெண்ட் பைல் ஒன்றை பி.டி.எப். பைலாக மாற்றலாம். எடிட் செய்வதில் வளைந்து கொடுத்துச் செல்வதுடன் மேலே சொல்லப்பட்ட சில கூடுதல் வசதிகள் தேவைப்படுவோர், வேர்ட் பேட் தொகுப்பிற்குப் பதிலாக டெக்ஸ்ட்டரைப் பயன்படுத்தலாம். இதனை இலவசமாக இறக்கம் செய்வதற்கு http://sourceforge. net/projects/texter/files/ என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லவும்.

மேக் சிஸ்டத்தில் இயங்கும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்

வரும் அக்டோபர் 26 அன்று, மேக் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கான தன் ஆபீஸ் 2011 தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட உள்ளது. 2008 ஜனவரிக்குப் பின்னர், மேக் சிஸ்டத்திற்கென எந்த ஒரு அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் இந்த தொகுப்பு வெளிவருகிறது. இந்த தொகுப்பு ஏறத்தாழ எம்.எஸ்.ஆபீஸ் 2010 போலவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசுவல் பேசிக் அடிப்படையில் அமைந்த மேக்ரோ அமைக்கும் வசதி, பெயர் மாற்றப்பட்ட ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், முழுத்திரை வசதி, பிரசன்டேஷன் அல்லது டாகுமெண்ட்டைக் காட்ட டைனமிக் ரீ ஆர்டர் வசதி, வேகமான தொடக்கம் ஆகிய புதிய வசதிகள் தரப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஹோம் மற்றும் மாணவர் தொகுப்பில், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் இணைக்கப் பட்டுள்ளது. ஹோம் மற்றும் பிசினஸ் பதிப்பில், அவுட்லுக் இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான அகடமிக் பதிப்பு ஒன்றையும் மைக்ரோசாப்ட் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்...!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
ஓட்டுநர்களில்லாத வாகனம்

கடந்த நூற்றாண்டில் மிகப்பெரிய விஞ்ஞான தொழில்நுட்பமான இணையதளம் உலகை தன் வசப்படுத்தியது. அடுத்த நூற்றாண்டில் இவ்வுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வசப்படுத்துவது என்பதுக் குறித்த கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது.


எதனையும் உறுதியாக நம்மால் கூறவியலாது. பயோடெக்னாலஜி முதல் ஆரோக்கியத்துறை வரையும், கிரகங்களை நோக்கிய பயணம் முதல் பூமியின் அடிப்பகுதியை நோக்கிய பயணம் வரை பலவகையான ஆய்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில வெற்றியும் பெற்றுள்ளன.

தினந்தோறும் புதிய புதிய உபகரணங்களும், தொழில்நுட்ப வசதிகளும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஆக மொத்தத்தில், உலகம் நம் கண் முன்னால் மாறிக்கொண்டே வருகிறது.

வரவிருக்கும் பெரிய மாற்றங்களில் ஒன்று வாகனங்களாகும். இவ்வளவு காலமும் வாகனங்களை ஓட்டுநர்களே ஓட்டி வந்தனர். அதாவது, ஒரு வாகனத்தை ஓட்ட வேண்டுமானால் ஒரு ஓட்டுநர் தேவை. ஓட்டுநர் இல்லையெனில் வாகனமில்லை.

ஆனால் இனிவரும் காலம் ஓட்டுநர்களில்லாத வாகனங்களின் காலமாகும். ஏற்கனவே சில நாடுகளில் ரெயில்கள் ஓட்டுநர் துணையின்றியே ஓடத் துவங்கிவிட்டன. ஆனால், இனி வரும் காலங்களில் சாலையில் ஓடும் வாகனங்களை ஓட்டுவதற்கு ஆள் தேவையில்லை. நாம் ஏறியிருந்தால் போதும், வாகனம் தானாகவே செல்லும். பயணத்தின் வழிமுறைகளையெல்லாம் வாகனம் பார்த்துக் கொள்ளும். ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் அதாவது செயற்கையான புத்தி வாகனங்களை சுயமாக கற்றுக் கொடுக்கிறது.

நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் எவ்வளவு நெரிசலான போக்குவரத்தைக் கொண்ட சாலையிலும் சுகமாக பயணிக்கலாம். பிரபல இணையதள தேடுதல் எந்திர நிறுவனமான கூகிள்தான் இத்தகைய வாகனங்களை பரிசோதனை முறையில் ஓட்ட துவங்கியுள்ளது.

அமெரிக்க சாலைகளில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு இவ்வாகனம் சுயமாக ஓடியுள்ளது. மனிதர்களின் தலையீடு இதில் மிகக்குறைவே. ஒரேயொரு விபத்து மட்டுமே ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னலில் வாகனம் நின்றபொழுது பின்னால் வந்த வாகனம் மோதிய விபத்தாகும் அது.