உதவி ! உதவி! கம்ப்யூட்டரில் வைரஸ்
1.எச்சரிக்கை சமிக்கைகள்: மெதுவாக இயங்குவது, எந்த கீ போர்டு அல்லது மவுஸ் இயக்கத்திற்கும் சரியான செயல்பாடு காட்டாதது, திடீரென இயக்கம் முடங்குவது, ட்ரைவ்களைச் சரியாகக் காட்டாதது, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் முறையாக இயங்காதது ஆகியவை வைரஸ் பாதித்த கம்ப்யூட்டர்களின் சில செயல்பாடுகளாகும். இவற்றுடன்,வழக்கத்திற்கு மாறான பிழைச் செய்திகள், மாற்றி அமைக்கப்பட்ட மெனுக்கள் மற்றும் டயலாக் பாக்ஸ்கள் எனக் காட்டப்படும்.
ஸ்பைவேர் மற்றும் மால்வேர் ஆகியவை கம்ப்யூட்டரில் இருந்தால், மெதுவாக இயங்கும் தன்மையுடன், நம் பிரவுசரில் புதிய டூல்பார்கள், லிங்க்குகள், ஹோம்பேஜ் மாற்றம், மவுஸ் பாய்ண்ட்டர் மாற்றம், சர்ச் இஞ்சின் மாற்றம் ஆகியவை ஏற்படும். நாம் டைப் செய்து பார்க்க விரும்பும் தளத்திற்குப் பதிலாக வேறு ஒரு தளத்திற்கு நம்மை இட்டுச் செல்வது, பாப் அப் விளம்பரங்கள் எனப் பலவகைகளில் அவை ஆட்டம் காட்டும். இதில் என்ன வேடிக்கை என்றால், நம் கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதும் இந்த மாற்றங்களை நம் கம்ப்யூட்டரில் சந்திக்கலாம்.
2. சிஸ்டம் பிரச்னைகள்: கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கினாலே, அதில் வைரஸ் அல்லது ஸ்பைவேர் உள்ளது எனக் கலவரப்பட வேண்டாம். நம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் வேறு சில ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னைகள் இருக்கலாம். கம்ப்யூட்டரின் டிஸ்க்கினை பார்மட் செய்திட வேண்டியதிருக்கும். மெமரி கூடுதலாகத் தேவைப்படும். அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருக்கலாம்.
3. சில தீர்வுகள்: இவ்வாறு ஸ்பைவேர், மால்வேர் அல்லது வைரஸ் இல்லாமல், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கினால், அதற்கென சில நல்ல தீர்வுகள் இலவசமாகக் கிடைக்கின்றன. சி கிளீனர் (CCleaner) என்னும் இலவச புரோகிராம் இதில் மிகச் சிறந்ததாகும். கம்ப்யூட்டரை மிக அழகாகக் குறைந்த நேரத்தில் ட்யூன் செய்திட இது சிறந்த புரோகிராம் ஆகும். தேவையற்ற ரெஜிஸ்ட்ரி கீகளை இது நீக்கும். IOBit Smart Defrag மற்றும் Auslogics Disk Defrag ஆகியவை, டிஸ்க் டிபிராக் செய்வதில் கில்லாடிகள். System Mechanic என்பதுவும் இந்த வகையில் சிறந்ததொரு புரோகிராம் ஆகும். (உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இருந்தால், டிஸ்க் டிபிராக் நீங்கள் செய்திடத் தேவையில்லை என்பதை இந்த வேளையில் நினைவு படுத்துகிறேன்.)
4.பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள்: அதிகமான திறனுடன் கூடிய ஆண்ட்டி வைரஸ் அப்டேட்டட் தொகுப்பு, பயர்வால், தேவையற்ற லிங்க்குகளில் கிளிக் செய்யாமை, சோதனை இன்றி அட்டாச்மெண்ட் பைல்களைத் திறக்காமல் இருத்தல் போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டு இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர், ஸ்பைவேர் தொகுப்புகள் ஊடுறுவலாம். இலவச புரோகிராம்களுக்காக, இணையத்தில் அலைந்து திரிபவர்களையும், பாலியல் கலந்த செய்திகளுக்கென இணையத்தில் மேய்பவர்களையும் இது போன்ற ஸ்பைவேர் புரோகிராம்கள் கட்டிப் போடுகின்றன. பல போலியான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் பெயரில், நம்மை ஏமாற்றும் கெடுதல் புரோகிராம்கள் பல அடிக்கடி வருகின்றன. நம் கம்ப்யூட்டரில் வைரஸ் இருப்பதாகக் காட்டி, இலவச ஸ்கேன் செய்து தருகிறேன் என்று ஆசை காட்டி, பின் பணம் கட்டு என்று பயமுறுத்தும்.
5.ஊடுறுவியதை எப்படி நீக்குவது? மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான ஸ்கேனர்கள் அனைத்தும், பாதிக்கப்பட்ட பைல்கள் என அவை அறிந்தவுடன், அவற்றை நீக்கும் சாதனங்களையும் கொண்டுள்ளன. இந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய Malicious Software Removal Tool, சாதனத்தினை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சாதனத்துடன் இணைத்துத் தந்து, ஒவ்வொரு மாதமும் அப்டேட் செய்கிறது. மால்வேர் புரோகிராம்களை நீக்குவது குறித்தும், பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவுவதற்காகவும் bleepingcomputer என்று ஒரு அமைப்பு உள்ளது (http://www.bleepingcomputer.com/). இந்த மன்றத்தில் இணைந்து மால்வேர் புரோகிராம்கள் குறித்த தகவல்களைப் பெறலாம். நீக்குவதற்கான உதவிகளையும், நீக்கும் புரோகிராம்களையும் இங்கு காணலாம்.
6. நாமாக எப்படி நீக்குவது? முதலாவதாக, சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்தலாம். வைரஸ், மால்வேர் அல்லது ஸ்பைவேர் வரும் முன், கம்ப்யூட்டர் நல்ல நிலையில் இயங்கும்போது, குறிப்பிட்ட நாள் ஒன்றை சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்டாக வைத்திருப்பது இதற்கு உதவும். அந்த நாளுக்குக் கம்ப்யூட்டரை மீட்டுச் சென்றால் (ரெஸ்டோர்), கம்ப்யூட்டரில் பதிந்துள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் நீக்கப்படும்.
கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் நுழைந்து, கிடைக்கும் பாப் அப் மெசேஜ்களை காப்பி எடுத்து, இணையத்தில் தேடுதல் சாதனங்களில் பேஸ்ட் செய்து தேடினால், இதே போன்ற இன்னல்களுக்கு ஆளானவர்கள், என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று தகவல் கிடைக்கும். அதே போன்ற நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்ளலாம்.
7. எதிர்காலத்தில் பாதிப்பைத் தடுக்க? ஆண்ட்டி வைரஸ், ஆண்ட்டி ஸ்பைவேர் மற்றும் பயர்வால் சாப்ட்வேர் தொகுப்புகளை நிறுவி, அவ்வப்போது அவற்றை அப்டேட் செய்து வைப்பது, நம் கம்ப்யூட்டரை தாக்குதல் களிலிருந்து காப்பாற்றும். CNET TechTracker மற்றும் Mozilla Plugin Checker போன்ற புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டர் எதிர்ப்பு புரோகிராம்களை எப்போது அப்டேட் செய்திட வேண்டும் என நினைவூட்டல்களை அளிக்கும். AVG LinkScanner மற்றும் McAfee Site Advisor போன்றவைகள் நாம் ஆபத்தான இணைய பக்கங்களில் நுழையச் செல்கையில் எச்சரிக்கும்.
NoScript Firefox என்ற பயர்பாக்ஸ் ப்ளக் இன் புரோகிராம், ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பிளாஷ் போன்றவற்றில் கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைத் தடுக்கும்.
பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாட்டினை எப்படி மேற்கொள்ள லாம் என்பதற்கு http://www.microsoft.com/security/pypc.aspx என்ற முகவரியில் உள்ள தளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நல்ல பல ஆலோசனைகளைத் தருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தருகிறது.அவை Security Essentials, Windows Defender. Windows Security Starter Kit ஆகியவை ஆகும்.
நம் கம்ப்யூட்டர்களில் எப்படியாவது நுழைந்து, தனி நபர் தகவல்களைத் திருடி, பணம் திருடும் கூட்டம் தொடர்ந்து மால்வேர் மற்றும் ஸ்பைவேர்களைத் தயாரித்துக் கொண்டு அனுப்பி வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. எனவே பாதுகாப்பாக இருந்தாலும், சில வேளைகளில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர். எனவே தான், இந்த புரோகிராம்களின் செயல் தன்மையினை அறிந்து, நாம் முறையாகக் கம்ப்யூட்டர்களைப் பாதுகாப்பது நம் கடமையாகிறது.