தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது
தூக்கம் மனிதனுக்கு அவசியத் தேவை. ஒருவருடைய ஆழ்ந்த தூக்கமே அவனை எப்போதும் விழிப்புடையவனாக இருக்கச் செய்யும். குறைந்த நேரம் தூங்கி அதிகம் உழைப்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் இவர்கள் குறைந்த நேரத்தில் நல்ல தூக்கம் பெறுவதால் தான் இவர்களால் நன்கு உழைக்க முடிகிறது.
அளவான தூக்கம்தான் மனிதனை ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும்.
தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது
தூக்கம் என்பது ஒரு இயற்கையான திரும்பத்திரும்ப நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த தூக்கம்தான் உடலில் வளர்சிதை மாற்றம் நன்கு நடைபெற்று உடல் வளர்ச்சி அடைய பெரிதும் உதவுகிறது. அனைத்து உறுப்புகளும் புத்துணர்வும் பலமும் பெற ஏதுவாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. நரம்பு, தசை, எலும்பு சம்பந்தப்பட்ட மண்டலங்களை பலப்படுத்துகிறது. பொதுவாக தூக்கம் என்பது களைப்புற்ற உடல் உறுப்புகள் மற்றும் மனதிற்கு இயற்கை கொடுத்த ஓய்வுதான்.
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் நன்கு தூங்குவார்கள். ஆனால் உழைப்பின்றி மன உளைச்சல் உள்ளவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.
சிலர் தூக்கம் வருவதில்லை எனக்கூறி இரவு மது, புகை பிடித்தல் போன்ற செயல்களை செய்வார்கள். மது ஆரம்பத்தில் மயக்கத்தைத் தருமே ஒழிய நல்ல தூக்கத்தைத் தராது.
மனப்பாதிப்பு, தீராத சிந்தனை, பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, இயலாமை போன்ற குணம் கொண்டவர்கள் தூக்கமின்றி தவிப்பார்கள்.
உடல் உழைப்பு
உடலும் மனமும் ஒருங்கே ஓய்வு எடுத்தால் தான் சிறந்த தூக்கம் உண்டாகும். உடல் உழைப்பு என்பது தற்போது மறந்தே போய்விட்டது. இவர்களிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றால் நான் அலுவலகத்திற்கு நடந்தே போகிறேன். அதனால் எனக்கு எதற்கு தனியாக உடற்பயிற்சி என்று கேட்பார்கள். ஆனால் இவர்கள் தூக்கத்திற்காக மருத்துவரை தேடுவார்கள்.
எவ்வளவு நேரம் தூங்கலாம்
ஒவ்வொரு மனிதனுடைய உடல் மற்றும் வயதைப் பொறுத்து தூக்கம் வித்தியாசப்படும். இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 7-8 மணிநேரம் தூக்கம் தேவை. ஆனால் பிறந்த குழந்தை 16-18 மணி நேரம் தூங்கவேண்டும். பள்ளிக்குச் செல்லாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் தூக்கம் அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் டீன்ஏஜ் பருவத்தில் உள்ளவர்களுக்கும் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். முதியவர்களுக்கு 7-8 மணி நேரம் தூக்கம் தேவை.
உடலில் உள்ள கடிகாரம்
நம் உடலில் நம்மை அறியாமல் ஒரு கடிகாரம் இருக்கிறது. இதுவே நம்மை தூக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் விழிப்படையவும் செய்கிறது. இந்த நேரக்காப்பாளர் செயலை உடலில் செய்ய மெலடோனின் (Melatonine) என்ற மூளையில் சுரக்கும் வேதிப் பொருள் உதவுகிறது. நாள் முழுக்க இதனுடைய அளவு சீராக இருக்கும். இரவு ஆனவுடன் இதன் அளவு அதிகரிக்கும். பின் இது தூக்கத்தைத் தூண்டும். அதனால் சரியான நேரத்தில் தூங்கச் செல்வர். இதேபோன்றுதான் விழிப்பு நிலையும்.
இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகலில் தூங்குவார்கள். பகலில் தூங்குவதால் இவர்களின் உடல்நிலை இயற்கைக்கு மாறான நிலையை அடையும்.
“பகலில் தூங்குபவன் பாடையில் போவான்” என்பது சித்தர் வாக்கு.
பகலில் தூங்கும்போது உடலை இயக்கும் வாத, பித்த, கபத்தில் பித்தமானது அதிகரித்து ரத்தத்தில் கலந்து ரத்தத்தை சீர்கேடடையச் செய்கிறது. இதனால் உடல் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகிறது. இயன்றவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.
தூக்கம் கெடுவதால் ஏற்படும் தீமைகள்
தூக்கமின்மையால் மன உளைச்சல், ஞாபக மறதி உண்டாகும். உடல் பலவீனம் அடையும்.
தூக்கத்தின் பயன்கள்
ஆழ்ந்த தூக்கம் மற்றும் விட்டு விட்டு விழிப்பு நிலை இல்லாத தூக்கம் தான் சரியான தூக்கம்.
நல்ல தூக்கம் ஒருவரின் செயல்திறமையை அதிகப்படுத்துகிறது. ஆராய்சியாளர்களின் கருத்துப்படி மூளையை உபயோகித்து செய்யக் கூடிய கடினமான வேலைகள் அனைத்தும் நல்ல இரவுத் தூக்கத்திற்குப்பின் நன்றாக செய்ய முடிகிறது. புதியதாக உருவாக்கப்படுகிற எண்ணங்கள் (Creative thinking) நல்ல தூக்கத்திற்குப் பிறகே உதயமாகின்றன.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். நாள்பட்ட சரியான தூக்கமில்லாதவர் களுக்கு ரத்தக்கொதிப்பு மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தூக்கத்தில்தான் நம்முடைய உடல் வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள்தான் குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டு மல்லாமல் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகப் படுத்துகிறது. ஆக.. நல்ல ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த அமைதியான தூக்கம் அவசியம்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு
உணவு முறைகளில் மாறுபாடு அவசியம் தேவை. சீரான, சமச்சீரான உணவுப் பழக்கம் வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். ஆவியில் வேகவைத்த பொருட்கள் நன்கு சமைக்கப்பட்ட உணவை உண்டு, அதிக காரம், புளி, உப்பு உள்ள பொருட்களை தவிர்த்து, நேரம் தவறாமல் சாப்பிட்டு வந்தால் அதுவே ஆழ்ந்த உறக்கத்திற்கு நம்மை ஆட்படுத்தும்.
இரவில் கீரை, மோர், தயிர், அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அரை வயிறு உணவே சிறந்தது. மன உளைச்சல், கோபம், எரிச்சல் உண்டாக்கும் செயல்களை தவிர்ப்பது நல்லது.
தூக்கம் வரும் முன் தூங்கச் செல்லக் கூடாது. தினமும் சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இரவு உணவுக்கு முன் கோடைக் காலமாக இருந்தால் குளிர்ந்த நீரிலும், குளிர் காலத்தில் சுடு நீரிலும் குளிப்பது நல்லது.
இரவில் வெகுநேரம் கழித்து அதாவது பின்னிரவு நேரங்களில் சாப்பிட்டால் தூக்கம் வராது. 7-8 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.
இரவு தூங்கச் செல்லும்போது மென்மையான இதமான இசை கேட்பது நல்லது. அதற்காக இரவு முழுவதும் வானொலியை பாடவிடுவதும் தவறு.
மதுபானங்கள் சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதுபோல் இருக்கும். ஆனால் இது ஆழ்ந்த நித்திரையைத் தருவதில்லை. அதற்கு பதில் நடுநிசியில் எழுப்பிவிடும். இதனால் தூக்கமின்மையே மிஞ்சும். எனவே இந்த பழக்கம் உள்ளவர்கள் மதுவைத் தவிர்த்தால் மட்டுமே நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.
தூக்கத்தைக் கெடுக்கும் மருந்து மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது. டிவி, கணினி போன்றவற்றை படுக்கையறையில் வைத்தால் நம் கவனம் முழுவதும் அதிலேயே இருப்பதால் தூக்கம் கெடும்.
இரவு உணவுக்குப் பின் குறுநடை அதாவது சிறிது தூரம் நடக்க வேண்டும். இது நல்ல தூக்கத்திற்கு மருந்து.
காபின் (caffein) என்னும் நச்சுப் பொருள் காபி, டீ, சாக்லேட், கோலா போன்றவற்றில் உள்ளது. இது சாப்பிட்ட 8 மணி நேரம் வரை உடலில் தங்கியிருக்கும். இதனால் இவைகள் தூக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்டது. தூங்கும் நேரத்தில் இவைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதுபோல் சிகரெட்டில் நிகோடின் என்ற நச்சுப்பொருள் உள்ளது. இதுவும் தூக்கத்தைக் கெடுக்கக்கூடியது.
படுக்கையறை நன்கு காற்றோட்டமானதாக இருக்க வேண்டும். தலையணை அதிக உயரமில்லாமலும், நன்கு சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
தூங்கும் முறைகள்
மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக்கொண்டு படுக்கக்கூடாது. இதனால் இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.
குப்புற படுக்கக்கூடாது. அதுபோல் கால்களை தவளைபோல் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.
இதனால் வலப்பக்கம் உள்ள சூரிய நாடியில் எட்டு அங்குலம் வரை சுவாசம் செல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். மேலும் சூரிய நாடியில் வரும் வெப்பக்காற்று பித்த நீரை அதிகம் சுரக்கச்செய்து உண்ட உணவுகளை எளிதில் சீரணமாக்கும் .
இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பவர்களின் இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைப்பதால் இரத்த ஓட்டமும் அதிகம் செல்லும். இதனால் இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதால் சந்திர நாடியாகிய இடப்பக்க மூக்கின் வழியே சுவாசம் 15 அங்குலம் வரை செல்லும். இதனால் உடல் வெப்பத்திற்குப் பதில் குளிர்ச்சியே ஏற்படும். சீதளம் உண்டாகும். இரவு உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்போய் விஷமாக மாற நேரிடும்.
எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுப்பதே நல்லது என்கின்றனர் சித்தர்கள். ஆனால் நீண்ட ஆயுளைப் பெற தெற்குத் திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது. மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பதால் கனவுகள், அதிர்ச்சி போன்றவை உண்டாகும்.
வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்துப் படுக்கக்கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர். வடதிசையிலிருந்து வரும் காந்த சக்தி நம் தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும் இதனால் மூளை, பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும்.
வெறும் தரையில் படுக்கக்கூடாது அது உடலில் இரத்த ஓட்டத்தைக் குறைக்கச் செய்யும்.
இரவு படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் கசகசாவை கலந்து கொதிக்க வைத்து அருந்தினால் நல்ல உறக்கம் ஏற்படும்.
நல்ல தூக்கமே நோயற்ற வாழ்வுக்கு அடிப்படை என்பதை உணர்ந்து நல்ல தூக்கத்தை அடைந்து நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.