தோல்விக்கு நன்றி சொல்...!
ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு இலக்கை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். இவை குறுகிய கால இலக்காகவோ அல்லது நீண்ட கால இலக்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், அவற்றிற்கேற்ப அவன் சில இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் அவற்றில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று உயர்ந்து நிற்க முடிகிறது. பலர் வெற்றிப்பாதையில் வரும் தடைகளை எண்ணி மனம் துவண்டு தனது குறிக்கோள்களைக் குறுக்கிக் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது. எவ்வித தடை வருமாயினும் சிலர் குறிக்கோள்களை விடா முயற்சியுடன் அடைய முனைவதே தன்னம்பிக்கையாகும்.
வெற்றியாளர்களில் இருவகை, ஒன்று வெற்றிக்கான அடிப்படை வசதிகள், அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள், மற்றொன்று வெற்றிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி அதில் வெற்றி காண்பவர்கள். இவற்றில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களே மேலோங்கி நிற்பவர்கள். ஏனென்றால், இவர்களுக்கு எந்த வசதியும் எந்த ஒரு நபரின் உதவியுமின்றி, தனது தன்னம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்துச் செயல்படுவார்கள். இதற்கு ஒரு உளவியல் காரணமும் உண்டு. பல சாதனையாளர்கள் தங்கள் கடந்த வாழ்வில் ஒரு வேளை உணவிற்குக் கூட எதுவுமில்லாமல் கஷ்டப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உளவியல் ரீதியாகச் சொல்லப்போனால், தேவை என்ற ஒன்று உருவாகும் போது ஏதாவது ஒரு இலக்கை அடைய வேண்டுமென்ற உந்துதல் பிறக்கும், அந்த இலக்கை அடையும் வரை அந்த உந்துதல் நீடிக்கும். இலக்கை அடைந்துவிட்டால் உந்துதலின் வேகம் குறைந்து கடைசியில் நின்று விடும். இது நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதல் வானளாவிய சாதனைகள் வரை இந்த அடிப்படையிலேயே நமது மனம் செயல்பட்டு வருகிறது. தேவை என்ற ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய ஒன்று, பிறந்தது முதல் சாகும் வரை ஏதாவது ஒரு தேவை நம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. இதனையே Motivational Process என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
எனவே, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். நிறைவேறும் வரை போராடிக் கொண்டிருக்கிறான். இந்த இலட்சியப் போராட்டத்தில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர், இடர்வரும் தடைகளால் மனம் துவண்டு குறிக்கோளை விட்டுவிடுகிறார்கள். தன்னம்பிக்கை இழந்து, மனச்சோர்வடைந்து “எனது விதி”, “என்னால் இயலாது”, “சூழ்நிலைக்காரணம்” என்றெல்லாம் புலம்பும் குணத்தைக் காணலாம்.
இவை அனைத்திற்கும் காரணம், இலட்யத்தை அடைவதற்கான குணாதிசயங் களை வளர்த்துக் கொள்ளாமையே. அவரவருக் கேற்ப துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் தன்னுடைய முழு ஈடுபாட்டையும், உடல் உழைப்பையும், தன்னம்பிக்கையோடு உட்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வியைக் கண்டு துவண்டு போகாத குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு இலட்சியப் பயணத்திலும், தோல்வி யென்பது இல்லாமல் வெற்றி பெற இயலாது. இடைவரும் தடைகளால் தோல்வியும், சரிவும் வரும்போது அவற்றைக் கண்டு மனம் தளரா மலும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். வெற்றியாளர்களைப் பட்டியலிட்டால், தோல்வியே அவர்களை உந்திய மாபெரும் சக்தியாக இருந்திருக்கும். அவர்கள், தோல்வியையும், சரிவுகளையும், வெற்றிப்படிகளாகவும், சிறந்த அனுபவங் களாகவே அனுசரித்திருக்கிறார்கள்.
முயற்சிகளில் வெற்றிகாண கீழ்க்கண்ட வற்றை பின்பற்றினால் வெற்றி பெறுவது எளிதாகும்.
இலக்கை நிர்ணயித்தல் (Goal Setting)
ஒவ்வொரு மனிதனும் தனது இலக்கை தனது ஆர்வத்திற்கேற்ப தேர்வு செய்து கொள் வது அவசியமாகும். இலக்கை நிர்ணயிக்கும் முன்னரே, அது வெற்றி கொள்ளக்கூடியது தானா? அதனால் ஏற்படும் தீமை, நன்மை. பின்னர் அடுத்த நிலை என்ன? என்ற கூர்நோக்குப் பார்வையோடு இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் – குறள்
திட்டமிடல் (Planning)
இலக்கை அடைவதற்கான எளிய முறையை வகுத்துக் கொள்ள வேண்டும். சரியான திட்டமிடல் ஆரம்ப நிலையிலேயே ஏற்படும் இடர்பாடுகளை சரியான முறையில் களைய வழிவகுக்கும். எந்த ஒரு செயலுக்கும் சரியான திட்டமிடல் மிகவும் இன்றியமையாத ஒன்று. எந்த ஒரு மாபெரும் தோல்விக்கும் சரியான திட்டமிடாமையே காரணமாகும்.
ஒருங்கிணைத்தல் (Organizing)
தேவையான மூலப்பொருட்கள் (resources) பயன்படுத்தக்கூடிய வழிமுறைகளையும், மனிதர்களின் உதவிகள், பலரின் அனுபவங் களையும் ஒன்று சேர்த்து ஆலோசித்து, அவற்றை சரிவர உபயோகப்படுத்துதல் மிக மிக அவசியமாகும்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் – குறள்
செயல்படுத்துதல் (Materialize)
மேற்சொன்ன அனைத்தையும் செய்து விட்டு, செயல்படுத்தாமல் காலம் தாமதம் செய்வது, செயல்படுத்துதலாகாது. எதிர்வரும் தடைகளுக்காக அச்சம் கொள்ளாமல், முறை யாக, நிதானமாக, ஆலோசித்து சிந்தனையைச் செயல்படுத்த வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் முயற்சி செய்யாமல், எந்த இலட்சியமும் முழுமையடையாது. எனவே ஆக்கபூர்வமாக செயல்படுத்துதல் அவசியமாகும்.
தன்னம்பிக்கை (Self Confidence)
இந்த இலட்சியப் பயணத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்க வேண்டும். இடைவிடாது உழைப்போம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கு மென்ற நம்பிக்கை வேண்டும். வீழ்ந்தாலும் எழ வேண்டுமென்ற எண்ணம் வேண்டும். தோல்வியை அனுபவமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியைப் படிக்கட்டுகளாக எண்ணும் மனோபாவம், தோல்வியே வெற்றியின் வழிகாட்டி என்கிற தொலைநோக்கு பார்வை யோடு செயல்பட வேண்டும்.
சகிப்புத்தன்மை (Tolerance)
இடர்ப்பாடுகளையும், சரிவுகளையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். எவ்வளவு பிரச்சனை ஏற்பட்டாலும், சகித்துக் கொள்ளும் குணம் மிகவும் இன்றியமையாத தாகும். பொறுமையோடு, ஏற்படும் சங்கடங் களையும், குழ்நிலைக்கோளாறுகளையும், சரிவு களையும் ஆராய்ந்து செயல்படுதல், தோல்வியைக் கண்டு மீண்டும் மன சோர்வடை யாமல், தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் மிக அவசியமான ஒன்றாகும்.
அர்ப்பணித்தல் (Sacrificing)
தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுதல் வேண்டும். எந்த ஒரு துறையிலும், முழு ஈடுபாட்டுடன், தான் அதற்காகவே வாழ்வதாகவே எண்ணி தன் வாழ்க்கையின் முக்கியத்துவம் முழுவதும் தனது இலட்சியமே என்று பாவிக்கிற தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்காக எந்த ஒரு ஆசையையும், விட்டுக் கொடுக்கிற மனப் பக்குவமே அர்ப்பணித்தலாகும்.
முழுஈடுபாடு (Involvement)
எந்த ஒரு இலட்சியப் பயணத்திலும், முழு ஈடுபாடு அவசியம். ஈடுபாடு இல்லாமல் செயல் படும் நபரால் நிச்சயமாக வெற்றிபெற இயலாது. தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது நமது இலட்சியம், கவனத்துடனும், முழு முனைப்புடனும் செயல்பட்டு வெற்றிபெற வேண்டும் என்கிற முழு ஈடுபாடு அவசியம்.
மேற்சொன்ன திறமைகளையும், குணாதிசயங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு பின்வாங்காமல் எதிர்கொள்ளும் மனோபலத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகள் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் நல்ல அனுபவங்களே. அவை நம்மை பண்பட்ட நபர்களாக உருவாக்கும் உபகரணம். மனித மனதை சிற்பமாக உருவாக்கும் உளிகள். உளிகளால் உருவாகும் வலிகளே நம்மை உயர்ந்தவர்களாக உருவாக்கும்.
வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள் நம்மை மேலும் உயர்த்தெழச் செய்யும் ஊக்கிகள். தோல்வியால் துவண்டுவிடும் மனிதர்களை நாம் இன்று மிகுதியாகக் காண்கிறோம். தேர்வில் வெற்றி பெறா விட்டால், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது வீட்டை விட்டு வெளியேறிவிடுவது, போன்ற அர்த்தமில்லாத செயல் களில் ஈடுபடும் நபர்கள் இன்று ஏராளம். வாழ்க்கை யினுடைய தத்துவத்தை மறந்து போனவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரவு-பகல், ஏற்றம்-இறக்கம், இது போலத்தான் வெற்றி-தோல்வியும் தோல்வி என்பதும், தோல்வியினால் மனச் சோர்வடைவதும், அதனால் முயற்சியில் மெத்தனம் காட்டுவதும் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது.
இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் பலபேர் முயற்சி செய்ய முற்படுவதில்லை. ஏனென்றால், தோற்றுவிட்டால்? என்ற பயம். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மனபக்குவமின்மை. தோல்வியும் நமக்கு ஏற்படும் அனுபவமே. அதனையும் சந்திப்போம், வெற்றி பெறவேண்டும் என்பது தவறில்லை. வெற்றி மட்டுமே பெறவேண்டும் என்று நினைப்பது, தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையை உருவாக்குகிறது. எனவே வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவர்கள் தோல்வியில் மனம் வருந்தாமல், அந்தத் தோல்வியைத் தோற்கடிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.
இன்றைய கால கட்டத்தில் பலபேர் முயற்சி செய்ய கூட முற்படுவதில்லை. முயற்சியில் தோற்றுவிட்டால் என்ன செய்வது? அடுத்த முயற்சியில் வெற்றி காண்பது! என்று எண்ணி தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும். நமது பலம் – பலவீனம் எவை? வெற்றி பெற்றவருடைய பலம் என்ன என்பதை எல்லாம் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
நாம் எப்படி வெற்றியை பெருமிதத்தோடு ஏற்றுக் கொள்கிறோமோ, அதுபோலவே தோல்வியையும் ஏற்றுக் கொண்டு பாவிக்கிற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையிலேயே நாம் தோல்விக்குத் தான் அதிகமாக நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அவையே நம்மை பக்குவப்படுத்தும் எந்திரம் என்ற மந்திரத்தை புரிந்து கொண்டால், முயற்சியில் வெற்றி என்பது நிச்சயம்.
பிறந்தது முதல் நாம் ஒவ்வொரு முயற்சியிலும், தோல்வியைக் கடந்தே வந்திருக்கிறோம். இன்று நாம் நடக்கிறோம் என்றாலும், பேசுகிறோம் என்றாலும், பல முயற்சிகளில் தோல்வியைக் கடந்தே வெற்றி கண்டிருக்கிறோம். முதல் முயற்சியிலேயே நடக்கவும் இல்லை, பேசவும் இல்லை. அது போலதான் நமது குறிக்கோள்களை அடையும் போதும், முதல் முயற்சியே வெற்றி தரும் என்ற நிச்சயம் இல்லை. எனவே எப்படி வெற்றியை பாவிக்கிறீர்களோ அதைப் போன்று தோல்வியையும் பாவியுங்கள். தோல்வி என்பது நிரந்தரமல்ல. உங்கள் விடாமுயற்சி நிரந்தரமாக இருந்தால் “தோல்வியும் ஒருநாள் உங்களிடம் தோற்கும்”.
நன்றி ஜி.கே.செல்லகுமார்