திடீர் மரணம் ஏற்படுவது ஏன்..?
எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் மரணம் ஏற்படும். வயது மூப்பு, விபத்து, தொடர் நோய் ஆகிய காரணங்களால் மரணம் ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், எந்த நோயும் இல்லாமல், நோய்க்கான அறிகுறிகளும் இல்லாமல், திடீரென சிலர் மரணம் அடைகின்றனர். இதற்கு "திடீர் இளவயது மரணம்' (சடன் அடல்ட் டெத்) என மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர்.
தென் கிழக்கு ஆசியாவில் வசிக்கும் மக்களிடையே இது போன்ற மரணங்கள் சகஜமாக உள்ளன. நாட்டு பாடல்களில் கூட இது கூறப்பட்டுள்ளது. "பங்குன்குட்' என்று பிலிப்பைனிலும், "போக்குரி' என ஜப்பானிலும், "லாய் தாய்' என தாய்லாந்திலும் இந்த மரணத்தை அழைக்கின்றனர். சிலர் "தோஷம்' என அழைக்கின்றனர். இது போன்ற மரணம் சம்பவிக்கும் வீடுகளில், பெண் எடுக்கவும் தயங்கும் பழக்கமும் உண்டு.
திடீரென மரணம் ஏற்படுவது, பெண்களை விட, ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. 32 வயதில் மரணமடைபவர்கள் அதிகம் பேர். இரவு தூங்கச் சென்று, விடிவதற்குள் மரணம் அடைவது தான், இது போன்ற மரணங்களுக்கான அறிகுறி.
மரணம் அடைந்தவருக்கு அருகில் படுத்திருப்பவர், திடீரென ஒரு அழுகுரலையோ, கத்துவது போன்ற சத்தத்தையோ கேட்டதாகக் கூறுவர். இது சூனியம், மாந்திரிகம், சாபம் என அவரவர் நம்பிக்கைகளை பொறுத்து கூறப்படுகிறது. இது போன்ற மரணங்களில், ஐந்து சதவீதத்தினரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் போது, இதயத்துடிப்பில் லேசான மாறுதல் இருந்ததற்கான அடையா ளம் மட்டும் தெரியும். இளவயது மரணம் என்பதாலும், ஆரோக்கியமான உடல் என்பதாலும் டாக்டர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இதயத் துடிப்புக்கு தேவையான மின்சக்தியில் மாற்றம் ஏற்படுவதற்கு, பாதிப்படைந்த மரபணு தான் காரணம். இதனால் தான் சில குடும்பங்களில், இத்தகைய மரணங்கள் பரம்பரையாக ஏற்படுகின்றன. தூங்கும் போது, நம் இதயம் துடிப்பது சற்று குறைகிறது. இது அளவுக்கு அதிகமாக குறைவதற்கான காரணம், மின்சக்தி மாறுபாடு தான். குறையும் இதயத்துடிப்பு, இறுதியில் நின்று விடுகிறது. இதனால் தான் இத்தகைய மரணங்கள், பெரும்பாலும் இரவு நேரத்தில் ஏற்படுகின்றன.
இத்தகைய பாரம்பரிய மரணங்கள் கொண்ட குடும்ப உறுப்பினர்களிடையே, குழந்தை பருவத்திலோ, விடலை பருவத்திலோ இதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரிவதில்லை. உடற்பயிற்சி செய்யும் போது, தங்களுடைய இதயம் வெகு வேகமாக அடித்து கொள்கிறதென்று பெற்றோரிடம் கூறுவர்; மயங்கி விழுவர்; திடீரென தலை சுற்றும். எனினும், உடல் ஆரோக்கியமாக இருப்பதால், பெற்றோரும், மருத்துவர்களும், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அதே போல் சாதாரண நிலையில், இவர்களிடம் எடுக்கப்படும் இ.சி.ஜி.,யும் சாதாரணமாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்த சில நொடிகளில் இ.சி.ஜி., எடுக்கும் போது மட்டும் வேறுபாடு தெரியும். எனினும், இது போன்று மரணம் அடைந்த 60 சதவீதத்தினரிடையே, மேலே சொன்ன அறிகுறிகள் கூட காணப்பட்டதில்லை. ஜீவாவும் இதில் அடக்கம். ஆரோக்கியமான நபர், படபடப்பான சூழ்நிலையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுகிறாரா, இவரது குடும்பத்தில் திடீர் மரணமோ, நோய் வாய்ப்படாத குழந்தையின் திடீர் மரணமோ ஏற்பட்டுள்ளதா, உடற்பயிற்சிக்கு பின், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். எனினும், இ.சி.ஜி.,யில் ஏற்படும் மாறுபாடை வைத்தே, திடீர் மரணம் சம்பவிக்குமென கூறி விட முடியாது. திடீர் மரணம் ஏற்பட்ட சிலரின் உடலை பரிசோதித்த போது, அவர்கள் அதுவரை கண்டறியாத ஒரு பாதிப்பு உடலில் இருப்பது தெரிந்தது.
இதய ரத்தக்குழாயில் கொழுப்பு அடைத்திருப்பது, படிமானம் ஏற்பட்டிருப்பது ஆகியவை, இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை துண்டித்திருக்கும் அல்லது தாமதப்படுத்திருக்கும். இதனால், மாரடைப்பு நோய் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கும். சிலருக்கு ரத்தக் குழாய்களே வேறு இடங்களில் மாறி வளர்ந்திருக்கும். பிறப்பிலேயே, "அயோடிக் ஸ்டெனோசிஸ்' நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஓடி ஆடும் இளவயதில், இவர்களின் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் அளவில் எந்த மாறுபாடும் தெரியாது. திடீரென மரணம் ஏற்படும் போது தான், இந்த குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.
"கார்டியோமயோபதி' என்ற நோயாலும் இதய தசைகள் பாதிக்கபட்டிருக்கலாம். இதுவும் சிலருக்கு பரம்பரையாகவே ஏற்படும். தசைகள் செயல் குறைந்த நிலையிலோ, பெரிய அளவிலோ காணப்படும். இதனால் சீரான இதயத்துடிப்பு இன்றியோ, இதயத்தின் சிக்கலான பகுதிகளுக்கு போதுமான அளவு ரத்த சப்ளையோ இல்லாமல் போகும். சில வைரஸ் தொற்றுக்கள் கூட, இதய தசைகளை பாதிப்படைய செய்யும், "மயோகார்டிடிஸ்' என்றழைக்கப்படும் இந்த தொற்றால், இதயத்திற்கான மின் சப்ளை சீராக இல்லாமல் போய் மரணத்தை ஏற்படுத்தும். டெர்பெனாடைன் மருந்தோ அல்லது கோகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களோ கூட, இதயத்துடிப்பை தாறுமாறாக ஏற்றி, உயிருக்கு உலை வைத்து விடும்.
எல்லாவித திடீர் மரணத்தையும், முன்கூட்டியே தடுக்க முடியாது. வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விதி என்று கூட இதைக் கருதி கொள்ளலாம். எனினும், குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் மயக்கம், நாடித்துடிப்பு அதிகரித்து வியர்த்தல், மூச்சுத் திணறலை தொடர்ந்து மயக்கம் ஆகியவற்றை பெற்றோர் கவனிக்க வேண்டும். இதே போன்று குடும்பத்தில் மற்ற யாருக்காவது அறிகுறிகள் இருந்து அவர்கள் திடீர் மரணம் அடைந்துள்ளனரா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். மயோகார்டிடிஸ், இ.சி.ஜி.,யில் மாறுபாடு, கார்டியோமயோபதி போன்றவற்றுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன. பிறப்பிலேயே உள்ள சில வகையான இதயக்கோளாறுகளுக்கு, அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. நொறுக்குத் தீனி சாப்பிட்டு கொண்டே, நீண்ட நேரம் அமர்ந்து "டிவி' பார்ப்பதால் ஏற்படும் கொழுப்பு படிமானங்களை, தினமும் ஒருமணி நேர உடற்பயிற்சி செய்வதன் மூலம் தவிர்க்கலாம். பெற்றோர் தான் இதற்கு உதாரணமாக அமைய வேண்டும். பெற்றோர் உடற்பயிற்சியில் ஈடுபடாமல், "டிவி' பார்த்து கொண்டே குழந்தைகளிடம் "உடற்பயிற்சி செய்...' என்று சொன்னால், குழந்தைகள் அவர்கள் அறிவுரையை பின்பற்ற மாட்டார்கள்