மனிதத் தூண்கள்!-எலும்புகள்
கட்டிடத்துக்கு இரும்புக் கம்பிகளைப் போல நமது உடம்புக்கு அடிப்படை ஆதாரமாகத் திகழ்பவை எலும்புகள். நமது எலும்புகள் வலுவானவைதான். ஆனால் அவையும் உடையவும், வளையவும், சிதையவும் கூடும். சத்தான உணவு, கவனம் மூலம் எலும்புகளைக் காக்கலாம். உணவில் போதுமான அளவு கால்சியச் சத்து, நல்ல உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கங்கள் ஆகியவை எலும்புகளை உங்கள் ஆயுளுக்கும் அசைக்க முடியாத உறுதியுடன் திகழ வைக்கும். வகைகள்
தட்டை எலும்புகள்- மண்டையோட்டின் தட்டுகள், முதுகுத்தண்டு எலும்பு
நீண்ட எலும்புகள்- தொடை எலும்புகள், கை எலும்புகள்
குறுகிய எலும்புகள்- மணிக்கட்டு, கணுக்கால் பகுதி எலும்புகள்
ஒழுங்கற்ற எலும்புகள்- முதுகுத்தண்டுப் பகுதி எலும்புகள்
உருண்ட எலும்புகள்- கை, முழங்கால், பாதங்களில் உள்ள `பாட்டெல்லா' மற்றும் சிறு எலும்புகள்
எலும்புகளின் பணிகள்
முழு உடம்புக்கும் தோற்றம், தசை இயக்கத்துக்கு ஆதரவு.
முக்கியமான உறுப்புகளுக்கும், மென்மையான திசுக்களுக்கும் பாதுகாப்பு. கால்சியம், பிற தாதுக்களைச் சேமிப்பது.
எலும்பு மஜ்ஜையில் ரத்த செல்களின் உற்பத்தி.
காதில் உள்ள மாலியஸ், இன்கஸ், ஸ்டேப்ஸ் எலும்புகள், ஒலியைக் கடத்துகின்றன.
பிறப்புக் குறைபாடுகள்
`ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பக்டா'- அசாதாரணமான விதத்தில் எலும்புகள் உடைவது. குணப் படுத்த முடியாது. சிகிச்சை முயற்சிகளில் அறுவைச் சிகிச்சையும், `பிசிக்கல் தெரபி'யும் அடங்கும்.
`கான்ஜெனிட்டல் ஆம்புட்டேஷன்'- கை, கால் விரல்களில் ஒன்று இல்லாமல் இருப்பது. 2000 குழந்தைகளில் ஒன்றுக்கு இம்மாதிரியான பாதிப்பு ஏற்படலாம்.
உடையும் எலும்புகள்
`ஆஸ்டியோபோரோசிஸ்' என்பது எலும்புச் சிதைவு நோயாகும். ஒரு எலும்பு முறிவு ஏற்படும்வரை இது தெரியாது என்பதால், அமைதி நோய் எனப்படுகிறது. இந்நோய் ஏற்பட்டால், எலும்பின் வெளிப்பூச்சு மெல்லியதாகும், அடர்த்தியான தேன்கூடு போன்ற எலும்புத் திசுக்களில் பெரிய துளைகள் உண்டாகும். கால்சிய இழப்பால் ஏற்படும இந்நோய், ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் குறைவு ஏற்படும் பெண்களை இது தாக்குகிறது. காரணம், கால்சியத்தைக் கிரகிப்பதற்கு உதவுவது ஈஸ்ட்ரோஜென்தான். இந்நோயைக் குணப்படுத்த வழியில்லை. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் `டி' நிறைந்த உணவு, போதுமான அளவு உடற்பயிற்சி, புகை, மதுபானம் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும்.
சூரியக் குளியலின் நன்மை
கால்சியத்தைக் கிரகிப்பதற்கு வைட்டமின் `டி' உதவுகிறது. இந்த ஒரு வைட்டமினைத்தான் உணவால் மட்டுமே அளிக்க முடியாது. சூரியனிலிருந்து நேரடியாக சருமத்தால் வைட்டமின் `டி'யை கிரகித்துக்கொள்ள முடியும். அதனால், எப்போதும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காதீர்கள்.
எலும்புகளைக் குணமாக்குவது
தடுப்பு, ஆதார அமைப்பு- முறிந்த எலும்பைச் சுற்றி நிலையான பொருட்களை இணைப்பது. அசைவைத் தடுப்பது.
மட்டை- முறிந்த எலும்பைச் சுற்றி உறுதியான பொருளை வைத்துக் கட்டுவது. தோலைப் பாதுகாப்பதற்காக தோலையடுத்து மென்மையான பொருள் வைக்கப்பட வேண்டும்.
எடையை இணைப்பது- முறிந்த எலும்புப் பகுதியுடன் எடையை இணைத்துத் தொங்கவிடுவது. அறுவைச்சிகிச்சை- உடைந்த எலும்பைச் சரிசெய்ய தகடு அல்லது கம்பியைப் பொருத்துவது. சிக்கலான எலும்பு முறிவுகளில் இது மேற்கொள்ளப்படுகிறது.
எலும்பின் தாதுப்பொருள் அடர்த்தி
எலும்பின் ஒரு சதுர சென்டிமீட்டர் தாதுக்களின் அளவு, எலும்பின் தாதுப்பொருள் அடர்த்தி எனப்படுகிறது. எலும்பு வியாதியை இது காட்டும். எலும்பு தாதுப்பொருள் அடர்த்தியை அறிய, `இரட்டைச் சக்தி எக்ஸ்ரே அப்சார்ப்டியோமெட்ரி' (டி.எக்ஸ்.ஏ) என்பது சிறந்த சோதனை முறையாகும். இதன்படி, -2.5 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் `ஆஸ்டியோ போரோசிஸ்'. -1 முதல் -2.5 வரை இருப்பது குறைவான எலும்பு அடர்த்தியைக் குறிக்கும். 0 என்பது என்பது ஆரோக்கியமான நிலையாகும்.
எலும்புகளில் 50 சதவீதம் நீர் உள்ளது. இதன் உள்பகுதியில் உள்ள அடர்த்தியான திசுவில் 75 சதவீதம் நீர் உள்ளது.
முறிந்த எலும்பு, 12 வாரங்களில் இணைந்து விடும்.
உடம்பிலேயே மிகவும் வலுவானது தாடை எலும்பாகும்.
எலும்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதன்மூலம் அவை, வளர்ச்சியடையும், உயிருள்ள திசுக்களாகத் திகழ்கின்றன.
குழந்தைகளின் எலும்புகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தங்களைப் புதுப்பித்துக்கொள்கின்றன.
கை மூட்டில் இடித்துக்கொள்ளும்போது `ஷாக்' அடித்ததுபோன்ற `சுருக்'கென்ற வலி ஏற்படுகிறது. அதற்குக் காரணம் அந்த எலும்பில் உள்ள `உல்னார்' நரம்பாகும்.
குழந்தைப் பருவத்தில் எலும்புகளின் அளவு 7 மடங்கு அதிகரிக்கிறது.
தோட்டப் பராமரிப்பு வேலை, எலும்புகளின் ஆரோக்கியம் காப்பதற்கு நல்ல பயிற்சியாகும்.
பறவைகளின் அலகுகள் உண்மையில் `கெரட்டினால்' சூழப்பட்ட எலும்புகளாகும். தோல், முடி, நகத்தில் காணப்படும் புரதம், கெரட்டின்.