பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள் !
பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
"வைஸ்' என்று சுருக்கமாக அழைக்கப்படும், "வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்' என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது. 11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. "வைஸ்' தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை.
"வைஸ்' தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, "வைஸ்' ஆய்வு செய்துள்ளது. இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, "வைஸ்' கண்டுபிடித்துள்ளது.
சாதாரண தொலைநோக்கியை விட, "வைஸ்' தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், "வைஸ்' தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது.
"விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும். ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், "வைஸ்' விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!' என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி. "பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!' என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு.