நல்ல குளிர்கண்ணாடிக்கு..
ஸ்டைலை' விரும்பும் இளைஞர்கள், யுவதிகளின் தேர்வு குளிர்கண்ணாடிகள். ஆனால் இன்று `பேஷனுக்காக' அல்லாமல் கண்களைப் காப்பதற்கு என்றே குளிர்கண்ணாடிகளை அணியத் தொடங்கிஇருப்போர் அதிகம். நேரடியான சூரிய ஒளியின் அபாயத்தை அறிந்து பலர் குளிர்கண்ணாடி வாங்கி அணிய ஆரம்பித்திருக்கிறார்கள். சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள் உங்களின் கண்ணிமைகளை மட்டுமல்ல, கண்ணின் வெளித் தெரியும் பகுதிகளையும் பாதிக்கும். புறஊதாக் கதிர்கள், சிலவகை `காட்டராக்ட்'களையும் ஏற்படுத்தக் கூடும்.
குளிர்கண்ணாடிகள், புறஊதா ஏ கதிர்களில் இருந்து மட்டுமல்ல, மிகவும் தீங்கு பயக்கும் புறஊதா பி கதிர்களில் இருந்தும் உங்களைக் காக்கும். ஆனால் எல்லா குளிர்கண்ணாடிகளும் புறஊதாக் கதிர்களைத் தடுப்பதில்லை. கண்ணாடியே அணியாமல் இருப்பதை விட, புறஊதா தடுப்பு பாதுகாப்பு இல்லாத, வெறும் `கலர்' கண்ணாடியை அணிவது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
குளிர்கண்ணாடி வாங்க நீங்களும் தயாராகிவிட்டீர்களா? இதோ, இந்த விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்...
புறஊதாக் கதிர் பாதுகாப்பு:
வண்ணம் அல்லது விலையை வைத்து மட்டும் ஒரு குளிர்கண்ணாடியைத் தேர்வு செய்யாதீர்கள். சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் திறன், கண்ணாடியின் அடர்வண்ணத்தையோ, விலையையோ பொறுத்தது அல்ல. 99 முதல் 100 சதவீதம் புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படும் குளிர்கண்ணாடிகளை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
வடிவம் முக்கியம்:
கண் பகுதியை பக்கவாட்டிலும் முழுவதுமாக மூடும் குளிர்கண்ணாடி, கூடுதல் பாதுகாப்பை அளிக்கும். அது, பக்கவாட்டிலிருந்து சூரியக் கதிர்கள் ஊடுருவுவதைத் தடுக்கும். சாதாரண `பிரேம்' கொண்ட குளிர்கண்ணாடிகளில் பக்கவாட்டில் இருந்து அதிகளவு புறஊதாக் கதிர்கள் ஊடுருவுவதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. எனவே சாதாரண `பிரேம்', குளிர்கண்ணாடிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்காது.
விலை விஷயம்:
எப்போதுமே சாலையோரக் கடையில் குளிர்கண்ணாடி வாங்காமல், அங்கீகாரம் பெற்ற தரமான கடையில் வாங்குங்கள். கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருந்தாலும், தரமான கண்ணாடியை மட்டுமே தேர்வு செய்யுங்கள். அதேநேரம், விலை அதிகமாக இருந்தால் மட்டும் தரமாக இருக்கும் என்றும் கருதி விடாதீர்கள்.
தரத்தைப் பரிசோதிப்பது:
குளிர்கண்ணாடியின் தரத்தை அறிய, அதன் வண்ணம் ஒரே சீராக இருக்கிறதா என்று பாருங்கள். கண்ணாடியில் குறைபாடு இருக்கிறதா என்று அறிய, கண்ணாடியை உங்கள் கை நீளத்தில் எட்டிப் பிடித்து, சற்றுத் தள்ளியுள்ள நேர்க்கோடான ஒன்றைப் பாருங்கள். உதாரணத்துக்குக் கதவின் விளிம்பு. அந்த நேர்க்கோட்டுக்குக் குறுக்காகக் கண்ணாடியை மெதுவாக நகர்த்துங்கள். அப்போது நேர்க்கோடு சிதைவுற்றாலோ, நகர்ந்தாலோ, வளைந்தாலோ, ஊசலாடினாலோ கண்ணாடியில் குறைபாடு இருக்கிறது என்று அர்த்தம். `கான்டாக்ட் லென்ஸ்'களை குளிர்கண்ணாடிக்கு மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது.