பயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்
போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் தொகுப்பிற்குப் பெயர் பெற்ற அடோப் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை வழங்குகிறது. இதன் படி, மாதக் கட்டணம் செலுத்துவதன் மூலமும், பயன்படுத்தப்படும் எண்ணிக்கைக் கேற்ப பணம் செலுத்துவதன் மூலமும் ஒருவர் இந்நிறுவனத்தின் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அண்மையில் கொல்கத்தாவில் அடோப் சி.எஸ். 5 தொகுப்பினை வர்த்தக ரீதியாக வெளியிட்டுப் பேசிய அடோப் மார்க்கட்டிங் பிரிவு தலைவர் இதனைத் தெரிவித்தார். பயன்படுத்தும் அளவிற்கு கட்டணம் என்பது, இணைய அடிப்படையில் மேற்கொள்ளப்படும். ஒருவர் இணையம் மூலமாக இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறாரோ அதற்கேற்ற அளவில் பணம் செலுத்த வேண்டும். மணிக்கணக்கு அல்லது வேறு அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். சந்தா அடிப்படையில் பணம் செலுத்துபவர்கள் குறிப்பிட்ட காலம் வரை, சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அதன்பின், உரிமத்தினை நீட்டிக்கவில்லை என்றால் பயன்படுத்த இயலாது.
அண்மையில் அடோப் வெளியிட்ட அடோப் கிரியேட்டிவ் சூட் 5ல், வடிவமைப்பிற்குத் தேவையான பல வழக்கமான பல அப்ளிகேஷன் களுடன், புதிய அப்ளிகேஷன் களும் தரப்பட்டுள்ளன. அடோப் பிளாஷ் கேடலிஸ்ட், போட்டோ ஷாப், இன் டிசைன் ஆகியவை புதிய சில தொகுப்புகளாகும். இவற்றில் 250க்கும் மேற்பட்ட வசதிகள் கிடைக்கின்றன.