தோல் சுருக்கத்தை குறைக்க
அழகான தோல் வேண்டும் என்று விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்தத் தோலை பாதுகாக்க என்னென்னவோ செய்கின்றனர். சிறிது சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அய்யோ போச்சே என்று கவலை அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.
தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய, நிறைய தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல் சுருக்கம் மறைவதோடு, தோலுக்கு ஈரப்பதமும் கிடைக்கிறது. இதனால் இளமையாகத் தோன்றலாம்.
இதற்கான ஆராய்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை 8 வாரங்களுக்கு தினமும் 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவினர் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர். வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் உள்ள லேக் மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கையான மினரல் வாட்டராகும் (நம்மூரில் கேன்களில் வைத்து கொடுக்கின்றனரே, அதுபோல டுபாக்கூர் வாட்டர் அல்ல).
இதில் உள்ள சாலிசின் செமித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. சாலிசிலிக் ஆசிடைத் தான் பெரும்பாலான ஸ்கின் கிரீம்களில் பயன்படுத்துகின்றனர் என்பது இங்கு ஒரு உபரிச் செய்தி . அதாவது, செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாகவே நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் காணமல் போகிறது.
இதில் கலந்து கொண்ட பெண்களை ஆராய்ச்சிக்கு முன்பும், பின்பும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆராய்ச்சிக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாகத் தோன்றியுள்ளனர்.
சாதாரணத் தண்ணீர் குடித்தவர்களுக்கு 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.
பிறகென்ன, பக்கெட் தண்ணீரை வைத்துக் கொண்டு படபடவென்று குடித்து தோல் சுருக்கத்தை மடமடவென்று விரட்ட வேண்டியதுதானே..!