குளோனிங் பசுக்களின் பால்
பிரிட்டனில் பல பண்ணைகளில் குளோனிங் பசு மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பால், நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. "இது குளோனிங் பசுவிடம் இருந்து பெறப்பட்ட பால்...' என எந்த முத்திரையும் இன்றி, அந்த பால் விற்பனை செய்யப்படுகிறது. குளோனிங் பசுக்களின் பால், இறைச்சிகளை விற்பனை செய்ய தனி சட்டம் எதுவும் பிரிட்டனில் இல்லை. எனவே, உடனடியாக அதற்கான தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என, மிருக வதை தடுப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். "குளோனிங் அல்லது குளோனிங் வாரிசு பசுக்களின் மூலம் கிடைக்கும் உணவு பொருட்கள், மனித உடல் நலனுக்கு ஏற்றதா என இன்னும் ஆய்வு செய்யப்பட வில்லை. குளோனிங் மூலம் உருவாக்கப்படும் மிருகங்களுக்கு உறுப்பு குறைபாடுகள், ஆரோக்கியமில்லாத உடல், வலி ஆகியவை உள்ளன. எனவே, குளோனிங் மிருகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்...' என, மிருக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு குளோனிங் மிருகங்களுக்கு எதிர்ப்பு இருந்தாலும், பிரிட்டன் விவசாயிகள் அது பற்றி கவலைப்பட வில்லை. "குளோனிங் பசுக்கள் மிகவும் பெரிதாக உள்ளன. அதன் மூலம் அதிக அளவு பால் கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு நல்லதுதானே. அதை ஏன் எதிர்க்க வேண்டும்?' என்கின்றனர் அவர்கள். "குளோனிங் மிருகங்கள் மூலம் உணவின் தரம் அதிகரிக்கும்!' என, விவசாயிகளுக்கு ஆதரவாக விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.