ரோபோ' குப்பைத் தொட்டி
இன்று பல நகரங்களில் குப்பை வண்டிகள் வீடு தேடி வந்து குப்பையைச் சேகரித்துச் செல்கின்றன. அது மாதிரி வீட்டுக்கு வந்து குப்பையை `விழுங்கி'ச் செல்லும் ரோபோவை ஐரோப்பிய விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
ஆள் உயரத்துக்கு இருக்கும் இந்த `ரோபோ' நீங்கள் தொலைபேசியில் அழைக்கும் நேரத்துக்கு வந்து உங்கள் வீட்டு வாயிலில் காத்திருந்து குப்பையைப் பெற்றுக்கொள்ளும்.
`டஸ்ட்கார்ட்' என்ற இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் பாலோ டாரியோ கூறுகையில், ``இது அடிப்படையில் ஒரு நகரும் குப்பைத் தொட்டிதான். ஆனால் இது அபாரமான உணர்திறனும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் கொண்டது'' என்கிறார்.
அவர் மேலும் தொடர்ந்து கூறுகையில், ``நாங்கள் மிகச் சிறந்த, மிகவும் நவீனமான ரோபோட்டிக்ஸ் பாகங்களைக் கொண்டு இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியை உருவாக்கியிருக்கிறோம். ஐரோப்பா முழுவதும் உள்ள, குப்பையை அகற்றும் நிர்வாகத்தினருக்கு இது பெரிய பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்கிறது என்று கூறலாம். இதில் உள்ள இழுப்பறையில் நீங்கள் உங்களின் குப்பைகளை அல்லது மறுசுழற்சிக்கான பொருட்களை இட்டுவிடலாம். ஆனால் இந்த `டஸ்ட்கார்ட்'டின் விசேஷம் இத்துடன் முடிந்துவிடவில்லை!'' என்கிறார்.
அப்படியென்ன விசேஷம்?
முதலாவதாக, இந்தத் தானியங்கி குப்பைத் தொட்டியை பயமின்றி அப்படியே தெருக்களில் இறக்கி விட்டுவிடலாம். இதில் `சென்சார்களும்', `காமிராக்களும்' பொருத்தப்பட்டுள்ளதால், தான் எங்கே செல்கிறோம் என்று இதனால் உணர முடியும். இது தனது பாதையை `பார்த்து' அறிந்து, நிலையான பொருட்கள் மீது மோதாமல் செல்லும். அதேபோல பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள்... ஏன், தெருநாய் வந்தால் கூட விலகிச் சென்றுவிடும்.
இந்த குப்பைத் தொட்டி `காணும்' காட்சிகள் வெளி கட்டுப்பாட்டு மையம் ஒன்றுக்கும் தொடர்ந்து அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும். அங்கிருந்து பார்த்தும் இந்த `ரோபோ' குப்பைத் தொட்டியைக் கட்டுப்படுத்தலாம், திசை மாற்றலாம். குப்பைத் தொட்டியை யாரும் திருடிச் சென்றுவிடாமலும், அதைச் சேதப்படுத்திவிடாமலும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கலாம்.
`டஸ்ட்கார்ட்' இயங்கும் பகுதியில் ஒரு `வயர்லெஸ் நெட்வொர்க்' அமைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அவ்வப்போது தேவையான தகவல்களைப் பெற்று இது நகரும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இது ஒரு புத்திசாலித்தனமான குப்பை அள்ளும் `எந்திரன்'! நம்மூருக்கு `இவன்' எப்போது வருவான்?