அனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த...
ஜிமெயிலில் இமெயில் பயன்படுத்துபவர்கள், மெயில் ஒன்றைத் தயாரித்து சென்ட் பட்டனை அழுத்தியபின்னர், உடனே அதனை அனுப்புவதை ரத்து செய்திட முடியும். மெயில் செய்தியில் தவறு இருப்பதை உணர்ந்து திருத்த விரும்புபவர்கள், கோபத்தில் மெயில் எழுதி, அனுப்பிய அந்த நேரத்திலேயே முடிவை மாற்றிக் கொள்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவுகிறது. சென்ட் பட்டனை அழுத்திய பின்னர் 5 விநாடிகளில் அதற்கான அன்டூ (Undo) பட்டனை அழுத்த வேண்டும். ஏனென்றால் ஜிமெயில் 5 விநாடிகள் கழித்தே மெயிலை அனுப்பும் வேலையைத் தொடங்குகிறது. ரத்து செய்யத் தரப்படும் இந்த நேரம் மிகவும் குறைவாக இருப்பதாகப் பலர் தெரிவித்ததனால், ஜிமெயில் இந்த கால அவகாசத்தினை அதிகமாக்கியுள்ளது. 30 விநாடிகள் வரை மெயில் அனுப்புவதை ரத்து செய்திடும் வசதியைத் தந்துள்ளது. 30 விநாடிகள் ஏன்? என்று நீங்கள் எண்ணினால், இதனைக் குறைத்துக் கொள்ளலாம். 5,10,20, 30 நொடிகள் என கால அவகாசத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதனை அமைத்திட Gmail > Settings > General > Undo Send என்று சென்று மாற்றவும்.