Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com

கடல், உயிரினங்களின் தாய் மடி. விசித்திரங்களின் உறைவிடம்

கடல், உயிரினங்களின் தாய் மடி. விசித்திரங்களின் உறைவிடம். வினோத உயிரினங்களின் புகலிடம். உலகையே தழுவி இருக்கிறது கடல். கரையில் கால் பதித்தவர்க்கெல்லாம் தென்றலால் தாலாட்டி சுகம் தருகிறது. கவிஞர்களுக்கு கற்பனை தருகிறது. வலைவிரிப்பவர்க்கும் வாழ்க்கை தருகிறது. வானுக்கு மேகத்தை பரிசளித்து, வான்மழையாகி நமக்கு வாழ்வளிக்கிறது. வணிகத்திற்கு வழிவிடுகிறது. கோபம் கொண்டால் கொந்தளிக்கிறது. சூறாவளியாய், சுனாமியாய் சுழன்றடித்து சூறையாடி விடுகிறது.

அட்லாண்டிக், ஆர்க்டிக், பசிபிக் பெருங்கடல்கள் உலகை சூழ்ந்துள்ளன. இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகியவை இந்தியாவை சூழ்ந்துள்ளன. இதுதவிர குறுகிய பகுதியில் நிலம் சூழ் கடல்கள் அமைந்துள்ளன. காஸ்பியன் கடல், செத்த கடல் (டெட் சீ) போன்றவை நிலம் சூழ் கடல்களாகும்.

கடல் மேற்பரபில் வீசும் வளிமண்டல மாற்றம், புவியீர்ப்பு மற்றும் காந்தசக்தி போன்றவற்றின் காரணமாக கடலில் அலைகள் தோன்றுகின்றன. அலையால் கடல் எப்போதும் சலனபட்டுக் கொண்டே இருக்கிறது.


பசிபிக் பெருங்கடல் உலகின் மிகபெரிய கடலாகும். 18 கோடி ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. உலக பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இது பூமியின் அனைத்து கண்டங்களின் கூட்டு நிலபரப்பை விட மிகபெரியதாகும்.

பசிபிக் கடலில் 2,500 தீவுகள் இருக்கின்றன. இக்கடலில் உலகின் மிக ஆழமான பகுதியான மரியானாட்ரெஞ்ச் இருக்கிறது. இது 10,911 மீட்டர் ஆழமுடையது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும். பசிபிக் கடல்நீரின் வெப்பநிலை துருவபகுதிகளில் 0 டிகிரிக்கும் குறைவு. நில நடுக்கோடு பகுதிகளில் 29 டிகிரி செல்ஷியஸ்.

இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் 3,890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7,450 மீட்டர். இந்தக் கடலில் ஏற்படும் தட்ப வெப்பநிலையால் இந்தியா இருமுறை மழை பெறுகிறது.

அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு பருவ காற்றும், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவக் காற்றும் நல்ல மழையைத் தருகின்றன. அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக்காற்றும் மழை தருகிறது.

வாணிபம் செய்வதற்கு கடல் வசதியாக இருக்கிறது. அதனால் பொருளாதாரத்திலும் கடலின் பங்கு முக்கியமாகிறது. இந்திய பெருங்கடலானது மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்பாதையை கொண்டிருக்கிறது. இது பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய பெருங்கடலை ஒட்டிய கரைபகுதிகளில் இருந்தே அதிகமான பெட்ரோலியம் எடுக்கபடுகிறது. இது உலக பெட்ரோலிய எரிபொருளில் 40 சதவீதமாகும்.

கடலானது பெட்ரோல் மட்டுமல்லாது மனிதனுக்கு தேவையான பல்வேறு வளங்களைக் கொடிருக்கிறது. உணவுத் தேவையின் பெரும்பகுதியை ஈடு கட்டுவது கடல்தான். மீன்கள், நண்டுகள், கடற்பாசி என பல உணவு பொருட்கள் கிடைக்கின்றன.

மேலும் கடற்கரை மணல்கள் பல்வேறு தாதுவளம் மிக்கவையாக இருக்கிறது. முத்துக்கள், பவளம் போன்ற ஆபரணங்களும் கடலில் இருந்து கிடைக்கின்றன. சங்கு குளிப்பதும் உண்டு. அலையில் இருந்து மின்சாரம் பெறபடுகிறது. நிலத்தில் கிடைக்காத பல்வேறு தாதுக்கள் கடலில் இருந்து எடுக்கபடுகின்றன.

உலகில் கடல்பகுதி 70 சதவீதம். 85 சதவீத உயிரினங்கள் கடலுக்குள்தான் வசிக்கின்றன. அவற்றில் பல விசித்திரமானவை. நீலத்திமிங்கலம் உலகில் மிகபெரிய உயிரினமாகும். நீளமான கடல்மீன் ஓர்பிஷ்(6மீ), உயரமான மீன் சன்பிஷ் (4மீ) ஆகும்.

கடல்சுறா மிகவும் விஷமும், வேட்டை குணமும் கொண்டது. தரையில் நடக்கும் மீன் இனமும் இருக்கிறது. அதன் பெயர் மட்டி ஸ்கிபர். பிளாங்டான் என்னும் மெல்லுடலி கண்ணாடிபோன்ற உடல் கொண்டது. மிகக்கொடிய விஷஜந்துக்கள் கடலில் அதிகம். கடற்பாம்புகள் அதிக விஷமுள்ளவை.

தட்பவெட்ப மாற்றத்தால் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஏற்படுகின்றன. அவை புயலாக, சூறாவளியாக மாறி நிலபகுதியை தாக்கி சேதபடுத்துகின்றன. ஆண்டுதோறும் புயல்களால் லட்சக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள். பேரலைகளான சுனாமியாலும் நிலம் பேரழிவைச் சந்திக்கிறது. கடந்த 2004-ல் ஏற்பட்ட ஆழிபேரலை 2 1/4 லட்சம் பேரை பலி வாங்கியது.

மனிதனின் தாறுமாறான புழக்கத்தால் கடல் மாசடைந்து வருகிறது. பிளாஸ்டிக் கடலில் கலப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் கடல்பறவைகள், ஒரு லட்சம் பாலூட்டிகள், கணக்கற்ற மீன்கள் சாகின்றன. கடற்பயணத்தில் சிந்தும் எரிபொருள், கடலில் கலக்கும் கழிவுகளாலும் கடல் மாசுபடுகிறது. இவற்றாலும் உயிரினங்களுக்கு ஆபத்துதான்...!