கடை தின்பண்டங்களை தவிருங்கள்!
சுவை மிகுந்த பலகாரங்களும், சாப்பாட்டு வகைகளும், பட்டாசுகளுமாய் கொண்டாடப்பட்டது தீபாவளி. அளவுக்கு அதிகமாக சுவீட், காரம், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை உண்டு மகிழ்வதே தீபாவளியாகி விட்டது. திடீரென ஒரே ஒரு நாள், இவ்வளவு வகைகளைச் சாப்பிடும்போது வயிற்றுப் போக்கு ஏற்படுவது சகஜம். ஒவ்வாத காகிதம் சுற்றப்பட்டு இனிப்பு வகைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இது உடலுக்கு ஆபத்து என்ற பிரசாரத்துடன், எச்சரிக்கை செய்திகளை தினசரிகளும், பத்திரிகைகளும் தாங்கி நின்றன. டிஷ்யூ காகிதத்தில் பால்கோவா சுற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, "டிவி'யில் எச்சரிக்கை விடப்பட்டது. சுத்தமான நெய் என்று சொல்லி விற்கப்படும் நெய்யில் தரம் குறைந்த டால்டா அல்லது பனை எண்ணெய் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் பலகாரம் சுட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒவ்வாமைகளை நம் வயிறு ஏற்றுக் கொள்ளாது. வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்படும். இது தொற்றால் ஏற்படுவது அல்ல. உணவு நச்சு அல்லது உணவுகளில் பயன்படுத்தப்படும் நிறமி உருவாக்கும் ஒவ்வாமையால் ஏற்படுவது. இவை தானாகவே சரியாகி விடும். எனினும், 24 மணி நேரத்தில் சரியாகவில்லை எனில், கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.வயிற்றுப் போக்கு தொ டர்ந்து ஏற்பட்டால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை உணர்த்த, நமக்கு தாகம் எடுக்கும். உடலிலிருந்து வெளியேறும் நீர் எவ்வளவு இருக்கும் என, கண் பார்வையில் கணக்கிட முடியும் எனில் நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர் வெளியாகாமல் போவதையும் கவனிக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் வெளியேறுவது நல்லது. அதையும் தாண்டி சிறுநீர் வெளியேறாமல் இருந்தால், நல்லதல்ல. சிறுநீர் நிறமும், அடர்த்தியும் கவனிக்கப்பட வேண்டும்.
இந்நேரத்தில் நீராகாரமாக பருக வேண்டியவை:
* பால் கலக்காமல், சற்றே சர்க்கரை கலந்த கருப்பு டீ.
* 50 சதவீத தண்ணீருடன் காற்றூட்டப்பட்ட சோடா.
* காற்றூட்டப்படாத சாதா சோடா.
* எலக்ட்ரால் போன்ற பானங்கள். இந்த பொடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என, அதன் பாக்கெட் மீது அச்சடிக்கப்பட்டிருக்கும். அதை மிகச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.
வீட்டிலேயே இதை தயார் செய்து கொள்ளலாம். ஆறு டீஸ்பூன் சர்க்கரையுடன், அரை டீஸ்பூன் உப்பு கலந்து, ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாகக் கரைத்துக் குடிக்கலாம்.
* நன்கு வேக வைத்த அரிசி கஞ்சியில், சிறிது உப்பு போட்டு குடிக்கலாம்.
லோமோட்டில் போன்ற வயிற்றுப்போக்கைக் குறைக்கும் மருந்துகள், மலத்தைக் கட்டி விடும். உங்கள் பிரச்னையைத் தீர்க்காது. நோயை நீளச் செய்யும். சிலர், வயிற்றுப் போக்கு நிற்கவில்லை என, இரண்டு மாத்திரைகளுக்கும் மேலாக உண்பர். இது மிகப்பெரிய தவறு. இப்படிச் செய்தால், வயிறு மப்பு தட்டி விடும். மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். எந்த நச்சால் உங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதோ, அந்த நச்சு, உடலிலிருந்து முற்றிலும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, இது போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தாதீர்கள். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இந்த மாத்திரைகளைக் கொடுக்கவே கூடாது. அதிக காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, மலத்தில் ரத்தம் வருதல் ஆகியவை ஏற்பட்டு விடும்.
வயிற்றுப்போக்கு (டயரியா), கழிச்சல் (டிசென்ட்ரி) ஆகியவை ஒன்றல்ல.
கழிச்சல் ஏற்படும்போது காய்ச்சலுடன், மலத்துடன் ரத்தம், சளி ஆகியவை வெளிப்படும். இதற்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு, "ஆன்ட்டிபயாடிக்' உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சில வகையான, "ஆன்ட்டிபயாடிக்' கொடுக்கக் கூடாது என்பதால், பொதுவாகவே, இக்கோளாறு ஏற்படும்போது, டாக்டரிடம் காண்பிப்பது நல்லது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படாது. பால் புட்டிகள், கடைகளில் கிடைக்கும் ரெடிமேடு உணவுப் பொருட்களை வாங்கி, மீண்டும் சமைத்துக் கொடுத்தல், பால் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவற்றால் வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அரிசி கஞ்சியோ, எலக்ட்ரால் போன்ற பானமோ கொடுக்க வேண்டும். இதையும் மீறி, அதிக அடர்த்தி மற்றும் அதிக நிறத்துடன் சிறுநீர் வெளியேறினால், டாக்டரிடம் உடனடியாகக் காண்பிக்க வேண்டும். சிலநேரங்களில் கட்டியாகவோ, கூழ் போலோ, அதிக துர்நாற்றத்துடனோ வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிறு உப்புசமாகி, "கரபுர'வென சப்தம் ஏற்படும். வாந்தி உணர்வுடன், வாயுவும் பிரியும். கியார்டியா என்ற கிருமியால் இது போன்று ஏற்படலாம். அமீபாவால் சிலருக்கு இது போன்ற வயிற்றுக்கோளாறு ஏற்படலாம். இது உருவாக, சில காலம் பிடிக்கும். அடி வயிற்றில் கடுமையாக வலி, மலத்தில் ரத்தம், சளி கலந்து வெளியேறுதல் ஆகியவை ஏற்படும். தொடர்ந்து பல வாரங்கள் இது போன்ற நிலை நீடிக்கும்.
இந்த இரண்டு கோளாறுகளுக்குமே, ஐந்து முதல் 10 நாட்கள் வரை, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சிகிச்சையை முழுமையாக முடிக்காவிட்டால், மீண்டும் அது தலைதூக்கும். அது எந்த காலமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தயிர், வெந்தயம் ஆகியவற்றைச் சாப்பிட்டு, வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்துபவர்கள் உண்டு. இவை தீங்கில்லாத சிகிச்சை முறைகள். நீங்களாகவே, மருந்து கடைகளில், "ஆன்ட்டிபயாடிக்' வாங்கிச் சாப்பிடக் கூடாது. நமக்கு என்ன கோளாறு என்பதைத் தெரிந்த பிறகே, "ஆன்ட்டிபயாடிக்' சாப்பிட வேண்டும். தவறான, "ஆன்ட்டிபயாடிக்' சாப்பிட்டால், கிருமியின் உரு மாறி, எந்த மருந்துக்கும் கட்டப்படாத நிலை ஏற்படும். உபாதை ஏற்படுவதற்கு முன்னரே, "ஆன்ட்டிபயாடிக்' சாப்பிடுவதும் பலன் தராது. இது வயிற்றுப் போக்கைக் குறைக்காது. மாறாக, சாப்பிட்ட ஆன்ட்டிபயாடிக்கை எதிர்க்கும் கிருமி உருவாக வழி வகுக்கும். மேலும், எதனால் வயிற்றுப் போக்கு உருவாகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவதே சிறந்தது. கடைகளில் விற்கப்படும் இனிப்பு, பலகாரங்களைச் சாப்பிடுவதை விட, அவற்றை வீட்டில் தயாரித்துச் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை நன்கு கழுவிய பின், அவற்றைப் பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான, பாதுகாப்பான நடவடிக்கைகள் மூலமே, வயிற்றுப் போக்கைத் தவிர்க்க முடியும். அப்படியே வந்து விட்டாலும், சரியான முறையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.