வேர்ட் டிப்ஸ்-பைல் முன்தோற்றம்
கீழே காட்டியுள்ள சூழ்நிலையில் இதனைப் படிக்கும் நீங்கள் ஒருநாள் நிச்சயம் இருந்திருப்பீர்கள். பைலைத் தேடுவீர்கள். அதன் பெயர் நினைவில் இல்லை. வேர்ட் பைல் தான்; ஆனால் என்று என்பது கூட நினைவில் இல்லை. ஒவ்வொன்றாகத் திறந்தால், அது இல்லை, இதுவும் இல்லை என உங்களைத் திட்டிக் கொண்டே மூடி மூடித் திறக்கிறீர்கள். வெகு நேரம் கழித்தே, நீங்கள் தேடிய பைல் கிடைக்கிறது. ஆனால், இதனைத் திறந்து பார்த்து, அது இல்லை என்று ஏற்கனவே நீங்கள் மூடிய பைல் தான் அது. இந்த அனுபவம் வேர்ட் பைலில் மட்டும் இல்லை. ஆபீஸ் தொகுப்பின் அனைத்து பைல்களிலும் ஏற்படலாம். பைல் தெரியவில்லை என்பதற்காக, விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பைத் திறந்து வைத்து ஒவ்வொன்றாகத் திறந்து மூட முடியுமா? இதற்கு ஒரு சின்ன வழியை, ஆபீஸ் தொகுப்பு காட்டுகிறது. இந்த வழிக்குப் பெயர் பைல் பிரிவியூ. அதனை எப்படி வடிவமைத்து பார்ப்பது என்று பார்க்கலாம்.முதலில் File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைத்தானே பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோவின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப் படுவதனைப் பார்க்கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக் குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம்.இல்லை என்றால் கர்சரை பைல் பட்டியலில் அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அந்த பைலின் பிரிவியூ கிடைக்கும். இந்த தேடல் எளிதாகத் தெரிகிறதா? நேரம் மிச்சமாகிறதா! அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.
வேர்டில் என் மற்றும் எம் டேஷ்
வேர்ட் ஆவணங்களில் சிறு இடைக்கோடுகளை பல இடங்களில் அமைக்கிறோம். ஆங்கிலத்தில் இவற்றை டேஷ் (Dash) என அழைக்கிறோம். வேர்ட் தொகுப்பில் மூன்று வகையான இடைக்கோடுகள் இருக்கின்றன. ஏன் மூன்று என்று கேட்டால், ஒவ்வொன்றையும் ஒரு பயன்பாட்டிற்கு என டெக்ஸ்ட் டைப் செய்பவர்கள் வைத்து அமைப்பார்கள். சரி, இவற்றை எப்படி அமைப்பார்கள், அவற்றை எப்படி அழைப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.
மூன்று வகையான டேஷ்களுக்கிடையே உள்ள வித்தியாசம் ( – —) அவற்றின் அகலத்தில்தான் இருக்கிறது. வேர்ட் தொகுப்பில், மைனஸ் கீயை அழுத்துகையில் ஒரு வகையான டேஷ் கிடைக்கிறது. இது சற்று குறுகலாக இருக்கும். இது ஒரு டேஷ். அடுத்ததாக சிறிது அகலம் கூடுதலான டேஷ்; இதனை என் டேஷ் என அழைக்கின்றனர். ஏனென்றால், இது என் என்ற ஆங்கில எழுத்தின் அகலத்தில் இருக்கிறது. எண்களின் வரிசையைச் சுட்டிக் காட்டுகையில் இது பயன்படுத்தப்படுகிறது. இன்னும் அகலமானது எம் டேஷ். இது எம் என்ற ஆங்கில எழுத்தின் அகலத்தில் அமைவது. இது வாக்கியங்களில், சில சொற்றொடர்களின் இடையே ஒன்றை விளக்கி எழுதுகையில் அமைக்கப்படுவது. என் டேஷ் ஒன்றை உங்கள் டெக்ஸ்ட்டில் அமைக்க, நம் லாக் அழுத்திய பின்னர், ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, நம்பர் பேடில் 0150 அழுத்தவும். எம் டேஷ் வேண்டும் என்றால், இதே போல் கீ அழுத்தி 0151 அழுத்தவும்.
இன்னொரு வழியும் உள்ளது. நியூமெரிக் கீ பேடில் உள்ள மைனஸ் கீ பயன்படுத்தி அமைக்கும் வழி. கண்ட்ரோல் கீ அழுத்தி மைனஸ் கீயை அழுத்தினால், வேர்ட் ஒரு என் டேஷ் அமைக்கும். கண்ட்ரோல் + ஆல்ட் + மைனஸ் கீ அழுத்தினால் எம் டேஷ் கிடைக்கும். ம்...ம்... அழுத்திப் பாருங்க..