நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். கால் கொஞ்சம் வலிக்கிறது. வலியை உணர்கிறீர்கள். ஆயினும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் வேலையை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். வலியால் நீங்கள் சற்று அவதிப்படுவதை தெரிந்துகொண்ட குடும்பத்தினர், டாக்டரைப் பார்த்து ஆலோசனை பெறும்படி கூறுகிறார்கள்.
டாக்டரை இன்று பார்க்கிறேன்.. நாளை பார்க்கிறேன் என்று கூறி, நீங்கள் நாட்களை கடத்தினால், உங்களுக்குள்ளே அந்த வலியை `ஏற்றுக்கொள்ளும்தன்மை' உருவாகிவிடும். வலியோடு வாழ்க்கையை ஓட்ட பழகிவிடுவீர்கள்.
யோசித்துப் பாருங்கள். மேற்கண்ட ஏற்றுக்கொள்ளும் தன்மையை, ஜீரணித்துக்கொள்ளும் தன்மையை வாழ்க்கையில் பல விஷயங்களில் நீங்கள் கடைபிடித்துக்கொண்டிருப்பீர்கள். வேலை, நட்பு, உறவு என்று பல நிலைகளில் இது தொடரும். முதலில், `வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கும்' என்று பிரச்சினைகளை சகித்துக்கொள்ளும் மனது பின்பு, அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, `நம்ம மட்டுந்தான் இப்படின்னு நினைச்சோம். வீட்டுக்கு வீடு வாசப்படி மாதிரி எல்லோரும் இப்படிப்பட்ட பிரச்சினைகளோடுதான் அலைந்து கொண்டிருக் கிறார்கள்' என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி, அதை சகஜமான விஷயமாக எடுத்துக்கொள்ளவும் செய்யும்.
இந்த `ஏற்றுக்கொள்ளும் தன்மையும்', `தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் தன்மையும்' சில நேரங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியது. பல நேரங்களில் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எப்படி என்றால், நீங்கள் அவசரமாக நண்பர் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது சாலையில் கொஞ்சமாக கிடந்த நீரில் ஏறிய காரால், அந்த நீர் தெறித்து உங்கள் பேண்ட்டின் ஒரு பகுதியை அழுக்காக்கிவிடுகிறது. சரி இருந்து விட்டுப்போகட்டும் என்று நீங்கள் ஏற்றுக்கொண்டு அவரை சந்திக்க போய்விடுகிறீர்கள். வீடு திரும்பி, துவைத்து சரிசெய்துவிடுகிறீர்கள். இதில் உங்கள் ஏற்றுக்கொள்ளும்தன்மை யும், தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ளும் தன்மையும் `ஓகே'தான்!
ஆனால்...
உங்கள் வீட்டின் முன் பகுதியில் கழிவு நீர் குழாயில் சிறிதளவு அடைப்பு ஏற் பட்டு விடும்போதும், உங்கள் உடலில் நோய் ஏற்பட்டிருக்கும்போதும், ஏற்றுக் கொள்ளும்தன்மையுடன் நீங்கள் ஜீர ணித்துக்கொண்டால் அது நல்லதல்ல. கழிவு நீர் பிரச்சினையை சிறிதாக இருக்கும்போதே சரிசெய்து கொள்ளா விட்டால் அது சுகாதாரத்திற்கே கெடு தலாகும். கவனிக்காமலே விடப்படும் நோய், பின்னாளில் தீராத நோய்க்கு கூட காரணமாகிவிடும். அதனால் சின்னச் சின்ன சிக்கல்களுக்கும் தீர்வு கண்டு விடுவதே மகிழ்ச்சியை வர வேற்கும் நல்ல வழி.
இப்போதெல்லாம் பத்து பேர் முதல் பத்தாயிரம் பேர் வரை கூடும் கருத்த ரங்கம், பயிற்சி வகுப்புகளில் `உங்களில் எத்தனை பேர் டென்ஷன் ஆகிறீர்கள்?' என்ற சாதாரண கேள்வியை கேட்டால், தயங்கித் தயங்கி முதலில் ஒருசிலர் கையை தூக்குவார்கள். அவரைப் பார்த்து இவர், இவரைப் பார்த்து அவர் என்று பின்பு ஒட்டுமொத்தமாக அனை வரும் கையை உயர்த்திவிடுவார்கள். அப்போது ஒவ்வொருவரும் `அப்பாடா இந்த கூட்டத்தில் இருக்கும் அனைவருமே நம்மைமாதிரிதான்' என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள். இது ஒரு ஆரோக்கியமற்ற நிலை. எல்லோருக்கும் இரண்டு கைகள் என்பது இயற்கை. அதுபோல், எல்லோருக்கும் டென்ஷனும் இயற்கை என்றால் ஏற்றுக் கொள்ள முடியாதல்லவா!
பெரும்பாலானவர்கள் தனக்கு டென்ஷன் ஏற்படும்போது, அதை தீர்க்கும் நிரந்தர வழியை தேடாமல், தற்காலிகமாக மனதை அதில் இருந்து திசைதிருப்பி, சிறிது நேரம் மனதை அமைதிப்படுத்தும் வழியைத்தான் தேடுகிறார்கள். அதனால் சினிமா பார்க்கும்போதும், ஷாப்பிங் செல்லும்போதும் குறையும் டென்ஷன் சிறிது நேரத்தில் மீண்டும் பாதை திரும்பி சம்பந்தப்பட்டவர்களிடமே வந்து சேர்ந்துவிடும்.
மனிதனுக்கு மனம்தான் அஸ்திவாரம். எல்லா விஷயங்களும் இங்குதான் ஆரம்பமாகிறது. மனிதனின் உடல் மரம் போன்றது. அதன் ஆணி வேர் மனம். மரத்தின் மேலே தெரியும் தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறோம். ஆனால் ஆணிவேர் மோசமாகிக்கொண்டே இருந்தால் மரத்தின் ஏதேனும் ஒரு பகுதி இலையோ, பூவோ, காயோ, கனியோ மோசமாகிக்கொண்டே தான் இருக்கும். நாம் பல நேரங்களில் இலை இலையாகப்பார்த்து, காய்காயாகப் பார்த்து, பழம்பழமாகப்பார்த்து தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறோம். வேரை கவனிக்காவிட்டால் ஒரு நாள் மரமே (மனமே) பட்டுப்போய்விடும்.
இன்று மனித மனம் பலகீனமாக இருந்துகொண்டிருக்கிறது. அதை பலப்படுத்தும் முயற்சிகளில் நாம் இறங்காமல், கூடுதலான வேலைகளையும், எதிர்பார்ப்புகளையும் அதற்கு கொடுத்து மென்மேலும் அதை பலகீனமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நமது உடல் பலகீனமாவது தெரிந்ததும், உடனே வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓய்வு, மருந்து என்று சிந்திக்கிறோம். ஆனால் மனதை கவனிப்பதும் இல்லை. தேவைக்கு ஓய்வு கொடுப்பதும் இல்லை. அதனால் ஆர்வமற்ற நிலையில் வேலைகளை செய்யவேண்டியதாகி விடுகிறது. வேலையை ஆர்வத்தோடு அனுபவித்து செய்தால், அதிலே மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் ஆர்வமின்றி, கடனே என்று வேலையை செய்வதால், வேறு வழியில் மகிழ்ச்சியை தேடவேண்டிய கட்டாயம் மனிதர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
`பேலன்ஸ்' செய்வது, அதாவது சமநிலையை கையாளுவதில் நமக்கு பக்குவம் குறைவு. வேலையாக இருந்தாலும், பொழுதுபோக்காக இருந்தாலும், நட்பாக இருந்தாலும், உறவாக இருந்தாலும் ஒன்று, அளவுக்கு மீறி ஆர்வம் காட்டுகிறோம். முக்கியத்துவம் கொடுக்கி றோம். நெருங்குகிறோம். இல்லாவிட்டால் அத்தனையையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு அதில் இருந்து முழுமையாக விலகி ஓடி விடுகிறோம். இதில் எல்லை என்பது நமக்கு தெரிவதில்லை.
மனதை சரி செய்தால்தான் நம்மால் எல்லையை உணர முடியும். எல்லையை உணர்ந்தால் தான் எல்லை வரை மகிழ்ச்சியை அனுபவிக்கவும், எல்லை மீறாமல் இருக்கவும் முடியும். மனதை சரிசெய்ய அதன் மீது "கவனம்'' செலுத்த வேண்டும்.
தியானம் என்பது இன்று எல்லோரும் உச்சரிக்கும் சொல். தியானம் என்றால், கவனம் என்றுதான் அர்த்தம். உங்கள் கார் மீது, செல்போன் மீது, வீட்டின் மீது, உறவினர்கள் மீது கவனம் வைத்திருக்கிறீர்கள். அதுபோல் மனதின் மீது கவனத்தை முழுமையாக விஞ் ஞான ரீதியாக செலுத்துவதுதான் தியானம்.
`நீங்கள் யாரை எல்லாம் கவனிக்கிறீர்கள்?'- என்று உங்களிடம் கேட்டால், `வீடு, மனைவி, மக்கள், அலுவலகம்.. என்று பலவற்றை அடுக்குவீர்கள். `நான் என்னையும் கவனித்துக் கொள்கிறேன்' என்றும் சொல்வீர்கள். `நான்' என்று நீங்கள் உங்கள் உடலைத்தான் சொல்வீர்கள். மனதை சொல்வதில்லை.
மனதே சரியில்லை என்ற வார்த்தை இப்போது ரொம்ப மலிந்துபோய்விட்டது. கோவிலுக்கு செல்கிறார்கள். அந்த நேரத்தில் மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது. இரண்டு மணி நேரம் உபன்யாசம் கேட்கிறார்கள். நிறைய நல்ல விஷயங்களை கேட்கும் அந்த நேரத்தில், மனது நன்றாக இருக்கிறது அற்புதமாக இருக்கிறது என்று கைதட்டுகிறோம். அங்கிருந்து வெளியேறிய அடுத்த நிமிடமே மீண்டும் பழைய குழப்பங்கள், பிரச்சினைகள், சச்சரவுகள். மீண்டும் போவோம்.. வருவோம்.. ஆனால் அங்கு வார்த்தைகளில் கிடைத்ததை, அவர் களால் வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏன் என்றால் வாழ்க்கை, குழப்பம் நிறைந்த மனதின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நாம், கவனம் செலுத்தி நம் மனதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், நம்மைச் சார்ந்த யார் மனதையும் நம்மால் கவனிக்க முடியாது. நமது மனைவி, குழந்தைகள் மனதைக்கூட கவனிக்க முடியாது.
இந்த உலகில் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? ஆம் என்று சொன்னால், அது நல்ல ஆசை!
ஆனால்..
- உங்களிடம் உணவு இருந்தால்தான் அதை நீங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும்.
- உங்களிடம் பணம் இருந்தால்தான் அடுத்தவர்களுக்கும் கொடுக்க முடியும்.
அதுபோல் உங்களிடம் மகிழ்ச்சி இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே நீங்கள் விரும்புகிறவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்க முடியும். அதனால் இந்த உலகம் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்பும் நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
விளக்கம்: சகோதரி ஜெயா, பிரம்மகுமாரிகள் இயக்கம்.