Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
என் வேண்டுதல்...!
இறைவா…!
அன்புக்கு அடையாளமாக
எப்பவும் தோற்பது நானாகவே இருக்கட்டும்

மற்றவரை ஜெயித்து
மகிழ்ச்சி அடைய என் மனம் விரும்பவில்லை

வலிகளும் வருத்தமும் எனக்குக் கொடு !
வசந்தமும் வாசமும் பிறருக்குக் கொடுக்கணும் !

சுமைகளையும் சோகத்தையும் எனக்குக் கொடு !
சுகத்தையும் சுதந்திரத்தையும் பிறர்க்குக் கொடுக்கணும் !

இழப்பையும் இறப்பையும் எனக்குக் கொடு !
இனிமையையும் இன்பத்தையும் மற்றவர்க்குக் கொடுக்கணும் !


மீளாத சோகம் எனக்குள்..
யாராலும் தீர்க்க முடியாத சோகம்..

பாசத்தோடு வளர்த்த பறவையை
பருந்து ஒன்று வந்து கொத்திக்
கொ(ன்று)ண்டு போனதே...

ஆசையோடு கட்டிய மணல் வீடு.
அலை வந்து சிதைத்து விட்டதே...

பக்கம் பக்கம் பார்த்து ஒட்டிய பட்டம்..
பனை மரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டதே...

மூச்சுப் பிடித்து ஊதி ஊதி பெரிசாக்கிய
பலூனும் உடைந்து போனதே...

மழை பெய்த வெள்ளத்தில்
நான் விட்ட காகிதக் கப்பல்
கரை சேராமல் தாண்டு போனதே...

இன்று நினைத்தாலும் மீளாத சோகம் எனக்கு..
யாராலும் தீர்க்கமுடியாத சோகம்...!!! ???
கோபம் தன்னையே அழித்து விடும்
உண்மையான பலசாலி யாரேனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) - புகாரி) (Volume 8, Book 73, Number 135)
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்...
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...
நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது... எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.
கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.
ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன
சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்... வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)
திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும். தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது. மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும். முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.
· கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது
மாரடைப்பில் விட்டு விடும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:
கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்
7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.
10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.
தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்...

உறவுகளானாலும்
சரி
, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன
. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்
.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"
தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்
"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம்.
இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்
.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது
.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!
தன்னம்பிக்கை

எத்தனை முறை தோற்றாலும் எனக்கு கவலை இல்லை
ஏன் என்றால் நூறு முறை ஜெயித்தவன் அல்ல
நான் ஆயிரம் முறை தோற்றவன்.
தோல்வியை பற்றி கவலையில்லை
நாளைய வெற்றியின் சிந்தனை மட்டுமே
என் நினைவுகளில்...
புதிய பூமி

கலகம் இல்லா உலகம் காண்போம்;
"ஒன்றே குலம்-ஒருவனே தேவன்"
நன்றாய் மனம், மொழி,மெய்யால்
நடத்தி காட்டுவோம்;
தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? படைத்தவன் ஒருவனுக்கே பயந்து விட்டால்....
படைப்பினம் யாவும்
வசமாகும் நம்மிடம்!!!
சமத்துவம் என்னும்
மரத்தினை
வேரறுக்கும்
சுயநலக் கோடாரியைத் தொட வேண்டா.
இவையெல்லாம்
இன்றே நடந்து விட்டால்.....
ஆதாம் ஏவாள்
ஆனந்தமாய் உலா வந்த
சுவனத்து சுகம்போல்

அமைதி பூங்காவாய்

அகிலமே மாறிவிடும்...



கவனமாகயிரு...

இளைஞனே
வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து
வெற்றி பெறவேண்டிய நீ
சிலரது வார்தைகளில்
உன்னை இழந்து விடாதே
கவனமாகயிரு…

மருத்துவனாக
கணினியாளனாக
கணிதமேதையாக
விஞ்ஞானியாக
பொறியாளனாக
இதில் ஏதோயொன்றாய்
நீ சமைந்திடவே
உன்னைசமைத்தவர்களின்
கனவு
அதை கலைப்பவர்களின்
கைகளில் சிக்கிவிடாதே
கவனமாகயிரு…

பள்ளிப் பாடநூல்களை
சுமக்கவேண்டிய உன்கரத்தில்
கலவரச்செய்திகளையும்
மதவாத பிரச்சனைகளையும்
சுமந்து வரும்
பத்திரிக்கைகள்
திணிக்கப்படுதை அனுமதிக்காதே
கவனமாகயிரு…

கல்லூரி வாயில்களில் சில
புல்லுருவிகளின் கோலங்கள்
உன் தோழமைக் கண்ணோட்டத்திற்கு
அவர்கள் உனக்கு அணியவிக்கப்படுவது
மதவாத கண்ணாடி
கண்ணிலியாய் நீ
உன் வகுப்புத் தோழர்களுடன்
வகுப்புவாதம் செய்வதற்கு
கவனமாகயிரு…

சமுதாயம் என்ற சாயத்தில்
உன்னை நிறமேற்றி
உனக்கு வர்ணத்தை கொடுப்பதற்கு
சிலர் தருணத்தை தாரைவார்க்க
தயாராகி இருக்கிறார்கள்
கவனமாகயிரு…

எங்கோ நிகழக்கூடிய
சில சம்பவங்கள்
படமெடுக்கப்பட்டு
உன் சிந்தனை அரங்கில்
திரையிடுவதற்கு
திட்டங்கள் தயாராகி
வினியோகிக்கப்படுகிறது
கவனமாகயிரு…
தடுக்கப்படுகிறோம்
ஒடுக்கப்படுகிறோம்
நசுக்கப்படுகிறோம்
என்ற தலைப்புகளில்
மூலைச்சலவைகள் செய்து
முணைப்போடு
முயற்ச்சிப்பார்கள்
மருள்கொள்ளாதே
கவனமாகயிரு…

வேதத்தை காண்பித்து
உனக்கு ஞானம்போதிக்கின்றோம்
கலங்கரை விளக்காய்
நேர் வழிகாட்டுகின்றோம் என்று
மெய்ஞ்ஞானியாகவேண்டிய
உன்னை
அஞ்ஞானியாக்கி விடுவார்கள்
கவனமாகயிரு...

மனிதநேயத்தை
நீ விதையுண்டுருக்கிறாய்
அது துளிர்விடுவதை துண்டித்து
தீவிரவாதம் பேசி
சுதந்திரமாய் வாழவேண்டிய
உன்னை
நான்கு சுவற்றுக்குள்
சிறைவைத்து விடுவார்கள்
கவனமாகயிரு…

நீ என்பது
இன்னொருவரின்
ஆளுமையல்ல
நீ சுயமிக்கவன் சூத்திரம் நிறைந்தவன்
உன் பலம் தெரியாமல்
உன்னை பலவீனர்களிடம்
ஒப்படைத்து விடாதே
கவனமாயிரு….!
யார் நீ..?!

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல...!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் செடி..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!
குறைகள்...

அது
இல்லாமல் இருக்க
நாம்..
இறையும் அல்ல..

அதைச்
சுட்டுபவர்கள்
நக்கீரர்களும் அல்ல..!

குறைகளை களையவே
மனிதப் பிறப்பு..
குறைகளை
களைந்துவிட்டால்
இனி ஏது பிறப்பு..??

இங்கே..
யாருக்கு இல்லை
குறை..?

குறையுள்ளவந்தானே
நிறையைத் தேடி
அலைகிறான்..

பையின் கணம்
குறையும்போது
பணத்தைத் தேடி
அலைகிறான்..

அனைக்கும்
அன்பு
குறையும்போது
காதலைத் தேடி
அலைகிறான்..

உடலில்,
வாலிபம்
குறையும்போது
வாழ்க்கையைத் தேடி
அலைகிறான்..

வாழ்க்கையின்
வாலிபம்
குறையும்போது
கடவுளைத் தேடி
அலைகிறான்...!!!

நண்பா..

குறைகளைக் கண்டு
குரைப்பதும்..
நிறைகளைக் கண்டு
நகைப்பதும்..
இயந்திர மனிதனின்
இயற்கை..

அதைச்
சிலர் செய்யாதிருப்பதுதான்..
செயற்கை..!!

குறைகளின்
குணங்களை
குறிப்பறிவதை விட்டுவிட்டு..

குறைகளில்
நிறையைக் காண்போம்..
எழுந்து வா....!!!!!!!
சிந்திக்க மறந்த என்னவனே!

மனிதனே..
என் இனத்தவனே..
சிரிக்கத் தெரிந்த நீ..
ஏன் சிந்திப்பதே இல்லை?!

இல்லாத வானத்தை
வருணிக்கும் நீ..
இருக்கும் மானத்தை
மறந்து விட்டாய்!

அழகாய்
வளர்ந்து வளர்ந்து
மீண்டும் தேயும் நிலவு போல..

உயரே
பறந்து பறந்து
தரைக்கு இரங்கும்
பருந்து போல..

கடலில்..
புரண்டு, எழுந்து, பின்
ஒடுங்கி விழும்
அலையைப் போல..

மண்ணில்..
பிறந்து வளர்ந்து..
மண்ணோடு மண்ணாவதுதானா
மனித இயல்பு??!

மனிதா..

உன் செவிகளை கொஞ்சம்
என் பக்கம் வை..

நிலவுக்குச்
சரித்திரம் தேவை இல்லை..

பருந்துக்கு
பணங்காசு தேவை இல்லை..

அலைகள்
புகழைத் தேடுவதே இல்லை..!

மனிதா,
நீ மட்டும் ஏன்..
நில்லாமல் ஓடுகின்றாய்?
நிலையில்லா செல்வம் தேடுகின்றாய்..?
நிம்மதி இன்றி வாடுகின்றாய்???

கொஞ்சம் பொறு!

ஒரு மேட்டை இடித்தால்தான்
ஒரு நாட்டை ஆக்க முடியுமா?

ஒரு காட்டை அழித்தால்தான்
உன் வீட்டை எழுப்ப இயலுமா??

ஓர் உயிரை
கொன்றால்தான்..
உன் வயிறு நிரம்புமா???

அடுத்தவன் அழிவில்தான்..
நீ,
வாழ்ந்தாக வேண்டுமா..?

நீ..
பகுத்தறிவு படைத்தவன்..
மறந்து விடாதே!

தன்னை வருத்தி..
பிறர்க்கு ஒளிதரும்
மெழுகுவர்த்தியை
படைத்ததும் நீ தானே..!

அதன் மேன்மை
விளங்கவில்லையா
உனக்கு?

யோசி..

விண்ணில் எழும் கதிரவனால்
ஊருக்கு நன்மை..

மண்ணில் விழும் மழைத்துளியால்
வேருக்கு நன்மை..

பெண்ணுள் இருக்கும் பொறுமையினால்
ஊருக்கு நன்மை..

உன்னுள் உறங்கும் திறமையினால்
யாருக்கு நன்மை??

நில்...!

பேசு..
மென்மையாக பேசு..
உண்மையே பேசு..

பொழுதுக்களை
பழுதாக்கியே
பழக்கப் பட்டவனா நீ?

இனியொரு விதி செய்..

ஊறார் குறையை
உளவு பார்ப்பதைவிட..
உன் குறை எதுவென்று
யோசி!

கடைசியாக ஒன்று..

உன் இனத்தால்
நீ வாழ்ந்தது போதும்...

இனியாவது..

உன்னால்,
உன் இனம் வாழ வேண்டும்..
உன் மொழி வாழ வேண்டும்..
உன் தாயகம் வாழ வேண்டும்..
இவ் வையகம் வாழ வேண்டும்..
உனை ஈன்றாள் வயிறு
வைகை போல் குளிர வேண்டும்!!!
விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்

நாடும் பொழுது பக்குவமாய் வந்து
நின்றிடும் குடும்ப நினைவும் குழந்தைகள் முகமும்
மாதம் முதல் தேதி என்றால்
தொலைபேசிக்கு முதலிடம் அங்கு

பேசினால் காசு கரைகிறது
பேசாவிட்டால் இதயம் கரைகிறது
சோதனையின் சொந்தக்காரர்கள் நாங்கள்
வேதனையின் மொத்த குத்தகைக்காரர்கள்

மூன்று ஆண்டுகள் கழிந்தால்
மூன்று மாத விடுமுறை
அவை விடுமுறை அல்ல
ஆயுள் கைதிகளின் பரோல்கள்

பிரயான தேதி நெருங்கிவிட்டால்
பித்தான நெஞ்சம் தொலைப்பது
மிச்சம் மீதி இருந்த கண் தூக்கத்தை
மலை ஏறுபவன் இதயம் இலேசாகும்

விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்
விலை கொடுத்து வாங்க வேண்டும்
சம்பாதித்து விட்டு வருபவன் இங்கே
செய்தே தீர வேண்டிய பணிகள்

உற்றார் சுற்றார் அனைவரையும்
கொடுத்து திருப்தி படுத்த வேண்டும்
பணமாக பொருளாக உணவாக உடையாக
மனித மனம் அல்லவா

என்றைக்கு திருப்தியிரும் அது
ஒருபோதும் அடைவதில்லை
எழுதி தொடர்ந்தால் மலை முகடுகளும் தாழ்வுரும்
நீ வாகன ஓட்டியாய் இருந்திருந்தால்

விபத்து ஒன்று ஏற்பட்டுவிட்டால்
கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள்
நீதான் குற்றவாளி என்று

திருடன் உன்னிடத்தில் வந்து தாக்க
தற்காப்புக்கு நீ அவனை தாக்கினாலும்
சட்டம் வெளிநாட்டவனாம் உன்னைத்தான்
குற்றம் சுமத்தி சிறைப்படுத்தும்

உதாரணங்கள்தாம் இவை எல்லாம்
தொடரும் ரணங்கள் எண்ணற்றவை
இவை நமக்கு நாமே
இட்டுவிட்ட முல்வேழியாகும்

காலங்களும் சோகங்களும்
தொடர்கதையாகும் நமக்கு
கால சக்கரம் விடைபகரட்டும்
நாளை சமூகமாவது நல்வழி வாழட்டும்
வரதட்சணை எனும் வன்கொடுமை!

எழுதியோர் கைகளும் ஓய்ந்துவிட்டன
இந்த வன்செயலை கண்டித்து
பேசியவர்கள் நாவுகளும் வரண்டாகிவிட்டது
பித்தம் தெளிவது எப்போது?

எந்த காலத்திலும் திருந்துவதில்லை
இந்த பொல்லாத ஜென்மங்கள்
பொன் வேண்டுமாம் பொருள் வேண்டுமாம்
பிள்ளையாம் இவனைப் பெற்றதற்காக;

பையனாக இவன் பிறந்ததற்காக!
பண்பில்லாத சிறுமதி யாளர்களே;
அவதாரம் எடுத்தா நீ இங்கு
ஆண் பிள்ளையாக புவி இறங்கினாய்?

பெற்றோர் உனைப் பெறுவதற்காக
பிரத்யேக தவம் ஏதும் செய்தார்களா?
வரம் ஏதும் பெற்று வந்தவனா நீ?
வரதட்சணை ஏன் பெறுகின்றாய்?

என்ன வித்தியாசம் கண்டுவிட்டாய் நீ
எதை இழந்து விட்டாய் நீ ஆனாய் பிறந்து?
பெண்ணை பெற்றவன் தர வேண்டுமாம்
உன்னை பெற்றவர் பெற வேண்டுமாம்

மண்ணில் புதையப் போகும் நாள்
மனிதனே உனக்கு நினைவில்லையா?
ஒப்புக் கொண்டு விடு உன்னை
உழைத்துப் பிழைக்க தகுதியற்றவன் என்று

மனப்பந்தலிலேயே சாசனம் எழுதிவிடு
மண்ணில் வாழும் தகுதியை;
இன்றோடு இழந்து விட்டேன் என்று!
இனி தலைநிமிர்ந்து நடவேன் என்று!!


நற்காரியம் நடைபெறும் போது அபசகுனம் பேசமாட்டீர்
நல்ல காரியம் தடை பட்டு விடுமாம்
மனப் பந்தலே உனது பாவத்தில் அல்லவா
மிகுந்து நிற்கிறது இங்கு

ஏழையாய் பிறந்துவிட்ட பெண்
உன்னை மனம் முடிக்க தகுதியற்றவளா?
எழுபதுக்கு எழுபது என்று
எண்ணித் தர வேண்டுமா உனக்கு?

எவன் கற்றுத் தந்தான் உனக்கு
எப்படி கழுவப் போகின்றாய்
ஏழைக் குமரிகள் சிந்தும்
இரத்தக் கண்ணீர்களின் கறைகளை?

வரதட்சணை ஏற்கும் வாலிபர்களே
வரவில் வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் பாவங்களின் பொதி மூட்டைகளில்
உங்களையும் அறியாது நீங்கள் சேர்ப்பதை

வங்கியில் வைப்பு நிதியாகவும்
வீடு வாசல் நிலமாகவும்
வண்டி வாகனங்களாகவும்
வீட்டு சாதனங்கள் அணிகலன்களாகவும்

தந்தவர்களிடம் பெற்றுக் கொண்டீர்கள்
தர இயலாதவர்களை வாட்டி வதைத்து
தூண்டிய இன்னல்களால்; - அவர்களின்
தற்கொலைகள் எல்லாமே;

நீங்கள் செய்யும் கொலைகள் தாம்
நாட்டில் எங்கே வரதட்சணை கொலை
நடந்தேறினாலும் உனக்கும் அதிலே பங்குண்டு
நடக்கும் தீமைகள் அனைத்திலும் தான்.



வரதட்சணையாக உனக்கு வாரி வாரி
வழங்கிவிட்டு வட்டி கடனாளியாக
வீதிகளில் நிற்கும் மணப்பெண்ணின் தந்தைகள்
வீடுதோறும் இங்கே உண்டு

முப்பதுகளை எட்டியும் மணமுடிக்காது
முதிர் கன்னிகளாய் ஊரெங்கும்
கரை சேராமல் தவித்திருக்கும் அவர்களின்
கண்ணீர்த் துளிகள் ஆழிகளாய் உள்ளனவே

இத்தனை பாவாங்களிலும் வாலிபனே உனக்கு
எள்ளளவும் குறையாது பங்கு உண்டு
எந்த மதத்திலே நீ இருந்தாலும்
எத்தனை சமாதானங்களை நீ கூறினும்

உல் நெஞ்சம் என்ற ஒன்று
உன் வசம் உண்டல்லவா .... அது
கல் நெஞ்சர்களை கூட
கேள்விகளால் துளைக்காமல் ஓய்வதில்லை


மாறாது எதுவுமே இல்லை இங்கு
மாற்றம் என்னும் சொல்லை தவிர
மாறுவதற்கு முயற்சி செய்யுங்கள்
மறுமணம் வீசும் பூந்தோட்டங்க ளாகட்டும்

பெற்றதை எயல்லாம் திருப்பி கொடுங்கள்
அடகு வைக்கப்பட்ட மானங்களை
அடமானங்கலாய் திரும்பப் பெறுங்கள்
பெண்களின் பெற்றோர்களிட மிருந்து.
நட்பு

கண்டங்கள் கடந்து விட்டாலும்
நெஞ்சில் கனன்றுக் கொணடிருக்கும்
உறவு அந்த உறவு

காலங்கள் கடந்து விட்டாலும்
கடல் அலையாய்
மீண்டும் மீண்டும்
இதயத்தை நனைக்கும் உறவு
அந்த உறவு

அன்னையிடமும்
அருமை மனைவியிடமும்
பகிர முடியாத
அந்தரங்கங்களை எல்லாம்
பகிர்ந்துக் கொள்ளும்
அற்புத உறவு அந்த உறவு

சோகங்களையும்
தாகங்களையும்
பகிர்ந்துக் கொள்ளும்
சத்தான உறவு அந்த உறவு

உள்ளத்திலும் உதட்டிலும்
ஒருமித்திருக்கும்
உறவு அந்த உறவு
இதற்கு தாய் வழியும் இல்லை
தந்தை வழியும் இல்லை

அது ஒரு சோகங்களை
இறக்கி வைக்கும்
சுமைதாங்கி

அது ஒரு மகிழ்சியை
பகிர்ந்து கொள்ளும்
பள்ளிக் கூடம்

அது ஒரு
பட்டாம் பூச்சியாய்
பறந்து மகிழ்ந்த
மலர் வனம்

அது ஒரு
மாறத மணம் விசும்
நந்தவனம்

சொற்களால் வடிக்க
அது கம்பர் கால காவியம் இல்லை
கற்களில் வடிக்க அது
சோழர் கால கற்சிலையும் இல்லை

நதியோரத்து
தென்றலின் சுகம் அது
கோடை மழையின்
சாரலின் சுகம் அது

உள்ளத்தால் மட்டுமே
உணர்ந்து கொள்ளும்
அற்புத உணர்வு அது

இந்த உறவுக்கு மட்டும்
என்னவோ தெரியவில்லை
வயசாவதே இல்லை

இது ஒரு
ஒளிர்ந்து மறையும்
மத்தாப்பூ அல்ல

இது ஒரு
பூத்து உதிரும்
உதிரிப் பூவும் அல்ல

உதிரும் பூக்கள்
உள்ள உலகில்
உதிரா பூ

இந்த நட்பு
சில நேரங்களில்
சில மனிதர்களிடம்
ஒரு முறை மட்டுமே
பூக்கும் அதிசய பூ
இந்த நட்பு...